சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுதும் 44 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்கா தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன், இத்தாலி, ஸ்பெய்ன், ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தையும் உயிரிழப்பு 2500-யும் கடந்துவிட்டது. உலகம்  முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தியிருப்பதால், உலகளவில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானதா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் தொடர்ந்து எழுப்பப்பட்டுவருகிறது. சர்வதேச அளவில் பல விஞ்ஞானிகள், கொரோனா செயற்கையாக ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டது என்கின்றனர். 

அந்தவகையில், நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி லூக் மாண்டேக்னெர், கொரோனா வைரஸ் வூஹானின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் தான் என்றும் அங்கிருந்துதான் இது பரவியது என்றும் தெரிவித்திருந்தார். 

இந்தியா சார்பில், கொரோனா விவகாரத்தில் சீனாவின் மீது நேரடியான குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை சொல்லப்படாத நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கொரோனா வைரஸ் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். 

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நிதின் கட்கரி, கொரோனாவுடன் வாழும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும். இது இயற்கையாக உருவான வைரஸ் அல்ல. செயற்கையாக ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரஸ். உலக நாடுகள் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே விரைவில் கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் என நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.