ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவில் தொடர்ந்து சலசலப்பு இருந்து வருகிறது. பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை அறிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்புவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்தத் தலைவரும் வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்தவருமான 88 வயதான சங்ப்ரியா கெளதம் தன் பங்குக்கு சில அதிரடியான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். “ மோடி அரசுடைய சில கொள்கை முடிவுகளை மக்கள் விரும்பவில்லை. அது அரசுக்கு எதிரான அதிருப்தியாக மாறியுள்ளது. 2014ஆம் ஆண்டில் நடந்ததுபோல 'மோடி மேஜிக்' எதுவும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது. 

தோல்வியைச் சந்திக்கவும் நேரலாம். கட்சியோடு நலன் கருதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை துணை பிரதமராக அறிவிக்க வேண்டும். கட்சி தலைவராக உள்ள அமித் ஷாவை மாற்றிவிட்டு மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் செளகானை கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும்.

 

 உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை உடனடியாக ஆன்மீகப் பணிக்கு அனுப்பிவிட்டு, முதல்வர் பதவிக்கு  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நியமிக்க வேண்டும்” என்று அதிரடியாக கருத்துகளைத் தெரிவித்திருக்கிறா சங்ப்ரியா கெளதம். வாஜ்பாய் அரசில் பதவி வகித்த மூத்த அமைச்சர்கள் பலரும் தற்போது பாஜகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் சங்ப்ரியா, மோடி - அமித் ஷா கூட்டணிக்கு எதிராகக் கருத்துகளைக் கூறி பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.