தேசம் கடந்த தமிழர்களின் ஒரே கேள்வி ‘இந்த நித்யானந்தாவுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கூட்டமும், பணமும் குவிஞ்சு கொட்டுது?’ என்பதுதான். இதற்கு அவரது சிஷ்ய வட்டாரம் சொல்லும் ஒரே பதில் ‘சுவாமிகளிடம் (நித்யானந்தாதான்) ஹீலிங் பவர் இருக்கிறது. எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும், அவர் ஒரு முறை தொட்டால் அது பஞ்சாய் பறந்துவிடும். உலகத்தின் எல்லா நாட்டு மனிதர்களும் அவரிடம் சீடர்களாய் இருக்கிறோம். காரணம், அவரிடம் எந்நாட்டு நோயையும் கொல்லும் பவர் இருக்கிறது.’ என்பதே. 
சீடர்கள் சொல்வது போல் , அவரது சத்சங்கத்தில் போய் அமரும் பலரும், அவரது ஆஸ்ரமத்தில் தங்கிவிட்டு வரும் பலரும் சொல்வது ‘ஹீலிங் பவர் இருக்கிறது நித்யானந்தா சுவாமியிடம்’ என்பதுதான். ஹீலிங் பவர் ஒருவரிடம் இருக்கிறதென்றால் அவரை கடவுளுக்கு ஈக்குவலாக மக்கள் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. ஆக நித்தி விஷயத்திலும் அதுவே நடக்கிறது. 


இந்நிலையில், நித்தியானந்தாவிடம் உண்மையிலேயே ஹீலிங் பவர் இருக்கிறதா? என்று அவரோடு மிக நெருக்கமாக பல வருடங்கள் பணி புரிந்தவரும், இப்போது நித்திக்கு எதிராக வெடி குண்டுகளைப் பற்ற வைப்பவருமான ஜனார்த்தன சர்மாவிடம் கேட்டபோது...“ஹிலிங் பவரும் இல்ல, கூலிங் பவரும் இல்ல. அவரு பார்க்கிறது அத்தனையும் டுபாக்கூர் வேலை. நம்ம எல்லார்க்குள்ளேயும் நம்மை நாமே குணப்படுத்திக்கிற , சரி செய்துக்கிற, சமன்படுத்திக்கிற சக்தி இருக்குது. ஆனால் 99 சதவீதம் பேர் அதை உணர்றதில்லை. இதை உணர்ந்தவங்கதான் சித்தர்கள். ஆனால் சித்தர்கள் ஞானிகளாகவும், சிற்றின்பத்திலிருந்து முற்றிலும் விலகினவங்களாகவும் தான் இருப்பாங்க. 
ஆனால் நித்தியானந்தாவோட கதைதான் உலகத்துக்கே தெரியுமே! அவரிடம் இருப்பது ஹீலிங் பவரல்ல. கிராமத்துல வேப்பிலை மந்திரிக்கிறது, விபூதி போட்டு நோயை குணப்படுத்துற மாதிரி, கை வைத்தியத்தின் மூலமா சிலர் சில சின்ன சின்ன நோயை விரட்டுறாங்க. நித்தியும் அதைத்தான் பண்ணிட்டு இருக்கிறார். இதுக்கெல்லாம்  கிராமத்து ஆளுங்க காசு வாங்க மாட்டாங்க. ஆனால் நித்திக்கோ அதுலதான் காசே கொட்டுது. 


நித்யானந்தாவோட ஹீலிங் பவரில் எந்த அதிசயமும், ஆச்சரியமுமில்லை. ஆனால், தன்னிடம் அது இருக்கிறா மாதிரி பேசி நம்ப வைப்பார். சத் சங்கத்தில் அவர் இப்படி டுபாக்கூர் ஸ்டேட்மெண்டுகளை அள்ளி விடுற நேரத்தில், கூட்டத்தில் கலந்து அங்கேயிங்கே அமர்ந்திருக்கிற நித்தியின் ஆட்கள் ‘சாமீ உங்களாலேதான் என் சர்க்கரை வியாதி போச்சு! என்னோட கேன்சர் நோய் போச்சு! என்னை கொன்ன ஒற்றை தலைவலியை ஒழிச்சது நீங்கதான்!’ அப்படின்னு ஏதாச்சும் ஸீன் போட்டுட்டே இருப்பாங்க. 
இதைப் பார்த்துட்டு, மொத்த கூட்டமும் அவரை நம்ப துவங்கிடும். இதன் மூலமா ஆசிரமத்துக்கு ஆளும் சேரும், பணமும் கொட்டும். இப்படித்தான் சாதாரண காய்கறி வியாபாரியில் துவங்கி, கார்ப்பரேட் கம்பெனி ஓனர் வரைக்கும் மயக்கி வெச்சிருக்கிறார் நித்யானந்தா. 
மற்றபடி அவர்கிட்ட எந்த பவரும் இல்லை.” என்று ஓப்பனாக போட்டுத் தாக்கியிருக்கிறார். ப்பார்றா!