பீகாரில், நிதிஷ்-லாலு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு நெருக்கடி முற்றுகிறது. அவர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என பா.ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி கூறி இருக்கிறார்.

லாலு பிரசாத் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல் புகார் வழக்கில் துணை முதல்-அமைச்சரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் மீதும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதனால் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என்று, நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மறைமுகமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தேஜஸ்வி பதவி விலக மறுத்து வருகிறார்.

பதவி விலகுவது குறித்து பீகார் சட்டசபை வளாகத்தில் தேஜஸ்வியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு நேரடி பதிலை தவிர்த்த அவர், ஊடகங்களில்தான் பதவி விலகும் கோரிக்கை உள்ளது என்று கூறினார்.

லாலு பிரசாத் யாதவும் மகனுக்கு ஆதரவாக, தேஜஸ்வி பதவி விலக மாட்டார் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். இந்தப் பிரச்சினையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் அதிகாரபூர்வமாக கருத்து சொல்லாவிட்டாலும் பா.ஜனதா கட்சி தலைவர்கள் தேஜஸ்வி பதவி விலகும்படி வலியுறுத்தி வருகிறார்கள்.

பீகார் மாநில பா.ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது ‘‘தேஜஸ்விக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லையென்றால் அவர் பதவி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்படுவார்’’ என்று கூறினார்.

தேஜஸ்வியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்துவதில் உறுதியாக இருக்கும்படியும்’‘ அவர் நிதிஷ்குமாரை அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

அவருக்கு ஆதரவாக நிதிஷின் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.வான ஷியாம்பகதூர் சிங் என்வரும் ‘‘கூட்டணி இன்றே உடைந்தாலும் நல்லதுதான்...பா.ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதை நாங்கள் மிகவும் விரும்புகிறோம்’’ என கூறி இருக்கிறார்.

இதற்கிடையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்த முதல்-அமைச்சர் நிதிஷ்குமாருக்கு சுஷில்குமார் மோடி நன்றி தெரிவித்து இருக்கிறார்.

நிதிஷ்குமாரின் ஆதரவில் அதிக அளவிலான முக்கியத்துவம் இருப்பதால் நன்றி தெரிவிப்பதாக கூறிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் 4 சுயேச்சை வேட்பாளர்களும் ராம் நாத்கோவிந்துக்கு வாக்களித்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், மகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி தலைவர்கள் கூடிப்பேசி, இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.