கொரோனா ஊரடங்கால் நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உள்நாட்டு உற்பத்தி, உள்நாட்டு வணிகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில், சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதற்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்குவதாகவும் அறிவித்தார். 

இதையடுத்து, நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு தினங்களும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுயசார்பு திட்டத்தின் அறிவிப்புகளை இரண்டு கட்டங்களாக அறிவித்துள்ளார். எஞ்சிய அறிவிப்புகள், தினமும் அடுத்தடுத்து அறிவிக்கப்படவுள்ளன. 

இன்று புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள் ஆகியோருக்கான அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், நடுத்தர மக்களின் கனவாக திகழும் சொந்த வீட்டிற்கான, முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டார். 

”பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டத்தின் ஒருபகுதியாக ஏழை  மற்றும் நடுத்தர மக்களுக்கான வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்கள் மீது மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம்(CLSS) மே 2017லிருந்து மார்ச் 31, 2020 வரை அமலில் இருந்தது. 

இந்த திட்டத்தின் மூலம் ரூ.6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஆண்டுவருமானம் கொண்ட நடுத்தர மக்கள் பெறும் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்கள் மீது மானியம் வழங்கப்படுகிறது.  அந்த திட்டத்தின் மூலம் 3.3 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.. 

அந்த திட்டம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிலையில், அதை மேலும் ஓராண்டுக்கு, அதாவது 2021 மார்ச் வரை நீட்டிப்பதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டுக்கடன் வட்டி மானிய திட்டம் 2021 மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது. இதுவரை 3.3 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ள நிலையில், இந்த கால நீட்டிப்பின் மூலம் மேலும் 2.5 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.