ரோபோ வெடிகுண்டுகள்: பயங்கரவாதிகள் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை!
நாட்டில் ரோபோ குண்டுகளை வெடிக்கத் திட்டமிட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது

மங்களூர் குக்கர் வெடிகுண்டு வழக்கில் முதன்மையாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் மீது ரோபோ வெடிகுண்டு தாக்குதல்களுக்கு சதி செய்ததாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டி வரும் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ், நாடு முழுவதும் ரோபோ வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் குக்கர் வெடிகுண்டு வழக்கில் அம்மாநிலத்தை சேர்ந்த 9 பேர் மீது என்ஐஏ தாக்கல் செய்துள்ள துணை குற்றப்பத்திரிகையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்களூர் குக்கர் வெடிகுண்டை வெடிக்கச் செய்தவர் ஐஎஸ்ஐஎஸ் தீட்டிய சதித்திட்டத்தில் பங்கேற்றதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 9 பயங்கரவாதிகளில் 5 பேர் தொழில்நுட்ப பின்னணியைக் கொண்டிருந்ததாகவும், குண்டுவெடிப்புகளை நிகழ்த்த ரோபோடிக்ஸ் படிப்பில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டனர் எனவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கவும் குண்டுவெடிப்புகளை நடத்தவும் கிரிப்டோகரன்சி மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் உதவியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
முகமது ஷரீக் (25), மாஜ் முனீர் அகமது (23), சையத் யாசீன் (22), ரீஷான் தாஜுதீன் ஷேக் (22), ஹுஜர் ஃபர்ஹான் பெக் (22), மஜீன் அப்துல் ரஹ்மான் (22), நதீம் அகமது கே.ஏ. (22), ஜபீவுல்லா (32), நதீம் பைசல் என் (27) ஆகியோரது பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்களில் முகமது ஷாரிக் என்பவர் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பில் முதன்மை குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஷரீக், யாசீன், முனீர் மற்றும் மாஜ் ஆகியோர் ஷிமோகாவில் துங்கா நதிக்கரையில் சோதனைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த அவர்கள் மீது, சட்டவிரோத நடவடிக்கைகள் (கட்டுப்பாட்டு) சட்டம், ஐபிசி, காழ்ப்புணர்ச்சி மற்றும் சொத்து இழப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.
இலவசங்களை மீண்டும் விமர்சித்த பிரதமர் மோடி!
“கடந்த மார்ச் மாதம், மாஸ் அகமது மற்றும் சையத் யாசின் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு குற்றங்களுக்காக அவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. மஜின் அப்துல் ரஹ்மான், ரீஷான் தாஜுதீன் ஷேக், மற்றும் நதீம் அகமது ஆகியோர் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளன. இந்த 5 பேரும் ரோபோடிக்ஸ் படிப்பைப் படிக்கவும், குண்டுவெடிப்புகளைச் செய்வதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர். வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தும் ஐஎஸ்ஐஎஸ்-இன் சதித்திட்டத்துக்கு அவர்கள் உதவியுள்ளனர்.” என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஷிமோகாவுக்கு அருகில் உள்ள துங்கா நதிக்கரையில் ஒரு கருவி வெடிக்க வைக்கப்பட்டது. தொடர்ந்து, நவம்பர் மாதம் மங்களூரில் குக்கர் குண்டுவெடிப்பில் ஷாரிக் என்பவர் போலீசாரிடம் சிக்கினார். இது குறித்து முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், இந்தக் குற்றங்களில் பயங்கரவாதிகளுக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய என்ஐஏ, நீதிமன்றத்தில் புதிய குற்றச்சாட்டுகளைச் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.