மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. ஆனால் முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுத்தால்தான் ஆதரவு கொடுப்போம் என சிவ சேனா கோரிக்கை வைத்தது. ஆனால் பா.ஜ.க. அதனை ஏற்க மறுத்து விட்டது. மேலும் ஆட்சி அமைக்கவும் பா.ஜ.க. உரிமை கோரவில்லை. இந்நிலையில் கடந்த சட்டப்பேரவையின் காலம் முடிவடைந்ததால் அதிக இடங்களை வென்ற பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க வருமாறு அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால் பெரும்பான்மை இல்லை என்று பா.ஜ. கூறிவிட்டது. இதனையடுத்து சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.

ஆனால் அந்த கட்சிகள் கூடுதல் அவகாசம் கேட்டன. இதனையடுத்து அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்தார். தற்போது அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சிவ சேனா தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான வேளைகளில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலை செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான மத்திஸ்த வேளைகளில் நீங்கள் ஈடுபட்டால் ஒரு வழி கிடைக்கும் என அமித் பாயிடம் தெரிவித்தேன்.

அதற்கு அவர் கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லா போயிட்டு இருக்கு, மகாராஷ்டிராவில் பா.ஜ.க.-சிவ சேனா தலைமையிலான கூட்டணி அரசுதான் அமையும் என கூறினார் என தெரிவித்தார். இதனால், பாஜகவுக்கு மாற்றாக, என்சிபி, காங்கிரஸ் , சிவசேனா கட்சிகள் சேர்ந்து அமைக்க உள்ள கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் புதன்கிழமை சரத்பவார், சோனியா சந்திப்பில் இதுகுறித்து பேசப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது