டெல்லி வன்முறை தொடர்பாக நள்ளிரவில் பாஜக கூட்டணி எம்.பி. ஒருவர் போலீஸாருக்கு புகார் அளித்தும், அதை கண்டுகொள்ளாமல் நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் இருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புகார் அளி்த்தது வேறுயாருமல்ல, முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் மகனும், சிரோன்மணி அகாலி தள் கட்சியின் எம்.பி.நரேஷ் குஜ்ரால்தான் அந்த புகாரை அளித்தார். குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே  டெல்லியில் நடந்த மோதலல் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேல் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பாஜக கூட்டணி எம்.பி ஒருவர் போலீஸாருக்கு நள்ளிரவில்  போன் செய்து புகார் அளித்தும் கண்டுகொள்ளப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் கூட்டணிக்கட்சியான சிரோன்மணி அகாலி தள் கட்சியின் எம்.பி. நரேஷ் குஜ்ரால் கூறுகையில், “ கடந்த புதன் இரவு 11.30 மணியளவில் தெரிந்த நபர் ஒருவர் எனக்கு போன் செய்து அவரும்,  15 இஸ்லாமியர்களும் டெல்லியில் கோண்டா சவுக் என்னும் இடத்தில உள்ள வீடு ஒன்றில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், கும்பல் ஒன்று தாக்க முயற்சிக்கிறது என பதற்றத்துடன் தெரிவித்தார்  நான் உடனடியாக போலீ்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்தவற்றை கூறி நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருக்கிறார், போலீஸாரும் புகார் பதிவு செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தாலும் யாரும் அங்கு செல்லவில்லை, என்னிடம் கூறியவர்களுக்கு உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. 1984-இல் நடந்ததை போன்று போலீஸார் தங்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்காமல் இருக்கும் சூழலினால் சிறுபான்மையின மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்'” எனத் தெரிவித்தார்

இதையடுத்து, டெல்லி போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், டெல்லிதுணை நிலை ஆளுநர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நரேஷ் குஜ்ரால் கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான் ஒரு மக்களின் பிரதிநிதி, எம்.பி., நேரடியாக போன் செய்து புகார் அளித்த  எனக்கு இந்த கதி என்றால் அப்பாவி மக்கள் என்ன ஆவார்கள். போலீஸாரின் அலட்சியத்தால் டெல்லி பற்றி எரிவதில் வியப்பில்லை”எனத் தெரிவித்துள்ளார்.