மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவம் மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய மாநில அரசு மருத்துவமனையான இந்தூரில் உள்ள MY மருத்துவமனையின் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) அடுத்தடுத்த நாட்களில் எலிகள் கடித்ததாகக் கூறப்படும் இரண்டு பச்சிளம் குழந்தைகளில் ஒன்று செவ்வாய்க்கிழமை சிகிச்சையின் போது இறந்தது.
1.2 கிலோ மட்டுமே எடையுள்ள, மிகவும் குறைந்த ஹீமோகுளோபின் அளவுகள், நுரையீரல் சிக்கல்கள் மற்றும் பிற பிறவி குறைபாடுகள் கொண்ட குறைந்த எடையுடன் பிறந்த (LBW) பெண் குழந்தை, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தது.
“இரண்டு பச்சிளம் குழந்தைகளின் தோள்பட்டை மற்றும் விரல்களில் எலிகள் கடித்தன. இதனைத் தொடர்ந்து இரு குழந்தைகளும் அறுவை சிகிச்சைத் துறையால் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, அருகிலுள்ள கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5-7 நாட்கள் வயதுடைய பெண் குழந்தை, அவரது பெற்றோரால் மருத்துவமனையில் கைவிடப்பட்டது.
"குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தை செப்டிசீமியாவால் இறந்தது, ஆனால் காயம் மிகவும் சிறியதாக இருந்ததால் எலி கடித்ததால் இறக்கவில்லை," என்று எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் அரவிந்த் கங்கோரியா கூறினார்.
"மற்ற குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் நிலையாக உள்ளது," என்று டாக்டர் கங்கோரியா கூறினார். முக்கியமாக, இறந்த பெண் குழந்தை கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தது என்ம், புதிதாகப் பிறந்த மற்றொரு குழந்தை, அண்டை மாவட்டமான தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தை.
கடந்த சில நாட்களாக ஐ.சி.யுவில் எலிகளைக் கண்ட போதிலும் மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கத் தவறிய அகன்ஷா பெஞ்சமின் மற்றும் ஸ்வேதா சவுகான் ஆகிய இரண்டு நர்சிங் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய கனமழை காரணமாக மருத்துவமனை கட்டிடத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு எலி தொல்லைக்கு காரணமாக இருக்கலாம் என்று நடந்து வரும் விசாரணையில் தெரியவந்துள்ளது. "ஐந்து மருத்துவர்கள் மற்றும் ஒரு நர்சிங் அதிகாரியைக் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை மருத்துவக் கல்லூரி அமைத்துள்ளது. அந்தக் குழு ஒரு வாரத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது," என்று டாக்டர் கங்கோரியா கூறினார்.
மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனை மட்டுமல்ல, மத்திய இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை மருத்துவமனைகளில் ஒன்றான மகாராஜா யஷ்வந்த்ராவ் (MY) மருத்துவமனை, இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு (MGM) மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
