ராமர் கோயில் கும்பாபிஷேகம்: நேரலையில் ஒளிபரப்பும் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்!
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது. அதுதவிர, பல்வேறு இந்திய தூதரகங்களிலும் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.
மேலும், கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு தேசிய தலைநகர் டெல்லி முழுவதும் உள்ள சுமார் 14,000 கோயில்களிலும் திரையிடப்படும் என்று டெல்லி பாஜகவின் கோயில் பிரிவு தலைவர் கர்னைல் சிங் தெரிவித்துள்ளார். விழாவை நேரலையில் காண ஒவ்வொரு கோயிலிலும் சுமார் 200 பேருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் மொத்தம் 30 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தில்லி-கர்னால் சாலையில் உள்ள காது ஷியாம் கோயிலில் ஜனவரி 20ஆம் தேதி 1.08 லட்சம் தீபங்கள் ஏற்றப்படும் என்றும், ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 17ஆம் தேதி கோயில் பூசாரிகள் 14,000 க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன பேரணி செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது, டெல்லி முழுவதும் உள்ள வீடுகளுக்குச் சென்று மக்களுக்கு 'அக்ஷதா' (வேகவைக்கப்படாத அரிசி மணிகள்) விநியோகித்து அருகில் உள்ள கோயிலில் ஒளிபரப்பப்படும் ராமர் கோயில் கும்பாபிஷேக நேரலையை காண அழைப்பு விடுப்பட்ர் எனவும் கர்னைல் சிங் தெரிவித்துள்ளார். மேலும், 'பிரான் பிரதிஷ்டா' விழா குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக சுமார் 1,000 யூனிபோல் போர்டிங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
அதேபோல், உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி அண்மையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தர்மவீர் பிரஜாபதி கூறுகையில், “தற்போது 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள். அவர்கள் இந்த நிகழ்வில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்பதற்காக, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.” என்றார். கைதிகள் அனைவரும் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல என்றும் அவர் கூறினார்.
மேலும், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நாடு முழுவதும் உள்ள பூத்கமிட்டி அளவில் ஒளிபரப்பும் திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.