new wat to link pan aadhaar

வருமானவரி செலுத்துபவர்கள், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஆன்-லைன், எஸ்.எம்,எஸ். வசதி தவிர்த்து, விண்ணப்ப படிவத்தில் கையால் எழுதிக்கொடுத்து இணைக்கும் வசதியை வருமான வரித்துறை நேற்று அறிவித்துள்ளனர்.

ஜூலை முதல் கட்டாயம்

ஜூலை 1-ந்தேதி முதல் வருமானவரி செலுத்தும் நபர்கள், தங்களின் பான் கார்டுஎண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைத்து இருந்தால்தான், வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய முடியும்.

2 வசதிகள்

பான்-கார்டையும், ஆதார் எண்ணையும் இணைப்பதற்காக ஏற்கனவே வருமான வரித்துறை ஆன்-லைன் மூலம் இணைக்கும் வசதியையும், எஸ்.எம்.எஸ். மூலம் இணைக்கும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. அதன்படி செல்போனில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பி இணைக்கலாம்.

மேலும், பான் கார்டு வழங்கும் என்.எஸ்.டி.எல். மற்றும் யூ.டி.ஐ.ஐ.டி.எஸ்.எல். அமைப்பின் இணையதளத்துக்கு சென்று இணைக்கலாம். வருமான வரித்துறையின் இணைதளத்திலும் சென்று இணைக்கலாம்.

விண்ணப்படிவம்

இந்நிலையில், இணையதளம் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் பான்கார்டு, ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களுக்காக விண்ணப்ப படிவத்தின் மூலம் இணைக்கும் முறையை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

கையொப்பம்

அதன்படி, வருமான வரித்துறை அளிக்கும் படிவத்தில் பான் எண், ஆதார் எண், ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், ஆகியவற்றை எழுதி, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண் இல்லை என்றும் உறுதியளித்து கையொப்பம் இட வேண்டும்.

பேட்டி

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், “ விண்ணப்பபடிவம் மூலம் ஆதார், பான்கார்டை இணைக்க இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படிவம் 1-ந் தேதியில் இருந்து வருமான வரித்துறையினரிடம் கிடைக்கும். அதே சமயம், எஸ்.எம்.எஸ். மூலம் இணைக்கும் முறையும் செயல்பாட்டில் இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.

பாதுகாக்கப்படும்

மேலும், விண்ணப்பபடிவத்தில் தங்களின் ஆதார் எண், பான் எண்ணை நிரப்பிக் கொடுக்கும் வருமானவரி செலுத்துபவர்களின் தனிப்பட்ட விவரங்கள், அவர்களின் பயோ-மெட்ரிக் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதை வேறு எந்த விஷயத்துக்கும் பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகளுக்கு வருமான வரித்துறை கண்டிப்பாகத் தெரிவித்துள்ளது.