1998ல் டெல்லியில் உள்ள தாஜ் மஹால் ஹோட்டலில் தங்குவதற்காக ஒருவர் தனது மாருதி சென் காரில் சென்றார். காரை பார்க்கிங் பகுதியில் விட்டு ஹோட்டலின் உள்ளே சென்று விட்டார். பின் ஹோட்டலில் தனது வேலை முடிந்தவுடன் பார்க்கிங்கில் விட்ட காரை எடுக்க சென்றவருக்கு அது அங்கு இல்லாதது கண்டு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. விசாரித்து பார்த்ததில் கார் திருடு போன சம்பவம் தெரியவந்தது. உடனே இது குறித்து தாஜ் ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். ஆனால் அவர்கள் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என கூறிவிட்டனர். இதனையடுத்து, தேசிய நுகர்வோர் பிரச்னைகள் குறைதீர்ப்பு ஆணையத்தில் தாஜ் ஹோட்டலுக்கு எதிராக காரை பறிகொடுத்த வாடிக்கையாளர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையம், தாஜ் மஹால் ஹோட்டல் நிர்வாகம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.  

தேசிய நுகர்வோர் பிரச்னைகள் குறைதீர்ப்பு ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து ஹோட்டல் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சாந்தனகவுதர் மற்றும் அஜய் ரஸ்தோகி அமர்வு, தேசிய நுகர்வோர் பிரச்னைகள் குறைதீர்ப்பு ஆணையத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. காரை பறிகொடுத்த வாடிக்கையாளருக்கு ரூ.2.8 லட்சம் இழப்பீடு வழங்க ஹோட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. விசாரணயின் போது, வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பார்க்கிங் சீட்டில், விருந்தினர்களின் சொந்த ரிஸ்க்கில் இருக்கும் என தெளிவாக கூறியுள்ளோம் அதனால் கார் திருட்டுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது ஹோட்டல் நிர்வாகம் கூறியது. 

ஆனால், ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளரான விருந்தினர்கள் தங்களது வாகனத்தின் சாவியை வாலட்டில் கொடுத்த பிறகு வாகனங்கள் திருடு போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை தவிர்க்க பார்க்கிங் டோக்கன்களில் உரிமையாளரின் இடர்பாடு பிரிவை எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியது.