விமானத்தில் உள்ளதைப் போன்று இருக்கைக்கு பின்புறம் எல்.சி.டி திரை, உதவியாளர்களை அழைக்கும் பட்டன் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட “அனுபூதி பெட்டி”களை முதல் முறையாக சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலை தயாரித்துள்ளது.

விரைவில் இந்த பெட்டிகள் சதாப்தி அல்லது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இணைக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஐ.சி.எப். அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது-

இந்த நிதியாண்டு சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்து 10 அனுபூதி ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். ரெயில் பயணிகளை அதிகமாக ஈர்க்க வேண்டும், விமானத்தில் உள்ளதைப்போன்று வசதிகள் ரெயில் பெட்டிகளிலும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பெட்டியை தயாரிக்க ரூ.3.4 கோடி செலவாகிறது. அனைத்து பெட்டிகளும் “லிங்கே கோப்மன் புஸ்சே” என்ற ஜெர்மனிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு இருக்குக்கு பின்பும் எல்.சி.டி. திரை பொருத்தப்பட்டுள்ளது. இந்த திரையில் பாடல்கள், திரைப்படங்கள், தகவல்களைக் கேட்கலாம், நமது கருத்துக்களையும் பதிவிடலாம். ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு ரெயில் நிலையத்தின் பெயர், அடுத்து வரப்போகும் இடம், ரெயிலின் வேகம் ஆகியவை அறிவிக்கப்படும். ஒவ்வொரு பயணிக்கும் ஒரு ஹெட்போன் கொடுக்கப்படும்.

மேலும், ஒவ்வொரு இருக்கையில் இருந்து தனநபர் அழைத்தால், அவருக்கு உதவ உதவியாளர்கள் இருப்பார்கள். உதவியாளர்களை அழைக்க தனியாக ஒரு பட்டன் தரப்பட்டுள்ளது. அதை அழுத்தி உதவியாளர்களை அழைக்கலாம். இரு இருக்கைகளுக்கு நடுவே மொபைல் போன் சார்ஜ் செய்யும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ரெயில் பெட்டிகளில் கதவு தானாகவே திறந்து மூடிக்கொள்ளம் வசதி செய்யப்பட்டு, பெட்டி முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

கழிப்பறைகள் அனைத்தும் பயோ-டாய்லெட்களாகவும், மிகவும் நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. பெட்டிகள் முழுவதிலும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது அனுபூதி பெட்டி தயாரிக்கப்பட்டு தயாராக இருப்பதால், ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டால், எப்போது வேண்டுமானாலும் பெட்டிகள் பயன்பாட்டுக்கு அனுப்பப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.