மகாராஷ்டிராவில் புதிய வகை கொரோனா; புனே, தானேவில் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை!
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் பெருமூச்சு விட்டு வரும் நிலையில் மீண்டும் புதிய வகை கொரோனா மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் 2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று பரவி கொத்து கொத்தாக சில நாடுகளில் மக்கள் மடிந்தார்கள். ஏறக்குறையை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் கொரோனாவில் இருந்து விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய வகை EG.5.1 என்ற கொரோனா பரவி வருவது மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த வகை கொரோனா மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மரபணு ஆய்வில் ஈடுபட்டு வரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவரும், பிஜெ மருத்துவக் கல்லூரியின் மூத்த அறிவியல் விஞ்ஞானியுமான ராஜேஷ் கார்யகர்தே டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ''மகாராஷ்டிரா மாநிலத்தில் EG.5.1 வகை கொரோனா கடந்த மே மாதத்திலேயே கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு மாதங்கள் ஆன பின்னரும், ஜூன், ஜூலை மாதங்களில் இந்த வகை தொற்று பரவவில்லை. இந்த நிலையில் XBB.1.16 மற்றும் XBB.2.3 வகை கொரோனாவும் இன்னும் பரவி வருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அறிக்கையின்படி, ஜூலை மாத இறுதியில் 70ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை ஆகஸ்ட் ஆறாம் தேதி 115 ஆக அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கள் கிழமை இந்த மாநிலத்தில் கொரோனா எண்ணிக்கை 109 ஆக இருந்தது.
தற்போது பிரிட்டனில் EG.5.1 வகை கொரோனா பெரிய அளவில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனாவுக்கு பிரிட்டன் அரசு எரிஸ் என்று பெயரிட்டுள்ளது. இந்த வகை கொரோனா தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே மகாராஷ்டிராவில் காணப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
திடீர் மாரடைப்பு: தூக்கத்தில் ஏன் இறப்பு ஏற்படுகிறது? இந்த இதய நிலையை எப்படி தடுப்பது?
''ஒமிக்ரான் XBB.1.9-ல் இருந்து பிறழ்ந்து வந்ததுதான் E.G.5.1 வகை கொரோனா. இந்தியாவில் பெரிய அளவில் இந்த வகை கொரோனா பரவவில்லை. ஆனாலும், தொடர்ந்து எண்ணிக்கையை கவனித்து வருகிறோம்'' என்று மருத்துவர் கார்யகர்த்தே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே, தானே ஆகிய இடங்களில் இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.