காரசார விவாதம்.. இடைநிற்றல் குறித்து கேள்வி எழுப்பிய மாணவி.. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சொன்ன பதில்
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய சாதனையாளர்கள் கல்லூரி மாணவர்களை நேரடியாக சந்தித்து New India Debate என்ற தலைப்பில் விவாதித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
இந்த விவாதத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் இரானி தலைமை வகித்தார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் சகாப்தம் என்ற பெயரில் விவாதம் நடைபெற்றது. அப்போது யுனிசெஃப் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி, ஹிமானி என்ற மாணவி, கோவிட் பெருந்தொற்றுக்கு பின், பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விகிதம் குறைந்துள்ளது, மேலும் வன்முறை அதிகரித்துள்ளது.” என்று கூறினார். அப்போது ஸ்மிரிதி இரானி “ தற்போது இளம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது என்பதற்கு ஆதாரம் கொடுங்கள்... இந்த நாட்டில் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்படுவதை எந்த நிர்வாக அமைப்பு வழிநடத்துகிறது?" என்று ஆதாரம் கொடுங்கள் என்று கேட்டார்.
அமைச்சரின் இந்த கேள்விக்கு பதிலளித்த ஹிமானி "இதற்கான அனுபவ ஆதாரம் எனது சொந்த மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ளது." என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, "என்னுடனும் நியூ இந்தியா ஜங்ஷனுடனும் இணைந்து உங்கள் மாவட்டத்தில் பணியாற்ற விரும்புகிறீர்களா..." என்று இராணி ஹிமானியிடம் கேட்டார், "விவாதத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை... ஆனால் இந்தியாவில் பெண்களுக்கான போர் வெற்றி பெறட்டும்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தனது X சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்மிருதி ஹிரானி “ நன்றி மிராண்டா ஹவுஸ், என்ன ஒரு அருமையான விவாதக் குழு உங்களிடம் உள்ளது! சிறந்த பேச்சாளர்கள் விவாதங்களில் ஈடுபடுவதையும், நமது மகத்தான தேசத்திற்காகக் காத்திருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய சாத்தியக்கூறுகளை உச்சரிப்பதையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். விவாதத்தின் போது யார் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் , நாங்கள் இன்னும் உயரத்திற்குச் செல்வதற்கு இதுவே சரியான நேரம் என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர்” என்று பதிவிட்டுள்ளார்.