மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஒரே ஒரு மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. மேலும், 2022-க்குள் அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வரும்  2022-ம் ஆண்டுக்குள், ஊரக பகுதிகளில் புதிதாக 1.95 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும். அத்துடன், அந்த வீடுகளில் கழிப்பறை வசதி, மின்சார இணைப்பு ஆகியவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

அத்துடன், 2022-ம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத வீடே இல்லை என சொல்லும் அளவுக்கு, அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில்  நாடு முழுவதும் 7 கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், 2022-ம் ஆண்டுக்குள் அதாவது 75-வது சுதந்திர தின விழா ஆண்டின் பொழுது நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊரக குடும்பங்களும் முழுமையான மின்சாரம் மற்றும் எரிபொருள் இணைப்பை பெற்றிருப்பார்கள்ஒரு நாடு ஒரு மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.