நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சதித்திட்டம் தீட்டியதாக புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று ஒரு புதிய முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்துள்ளனர். இந்த எப்ஐஆரில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தவிர மேலும் ஆறு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது குற்றவியல் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த எப்ஐஆரில் சாம் பிட்ரோடா மற்றும் மூன்று நபர்கள், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL), யங் இந்தியன் மற்றும் டோடெக்ஸ் மெர்ச்சண்டைஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு

அமலாக்கத்துறை டெல்லி குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தியாவில் நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை அசோசியேடெட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம் நடத்தி வந்தது. நேஷனல் ஹெரால்டு நமது நாட்டின் முதல் பிரதமர் நேரு தொடங்கிய பத்திரிகையாகும். கடன் பிரச்சனையில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்ட நிலையில், இதை சரி செய்ய காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் வழங்கியதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக மாற்றிய சோனியா, ராகுல்

இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துகளை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சட்டவிரோதமாக யங் இந்தியன் லிமிடெட் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றிக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ‛யங் இந்தியா' நிறுவனத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சுமார் 76% பங்குகளை வைத்திருந்ததாகவும், ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டதாகவும் பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம்சாட்டினார்.

உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தர வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்த கடந்த 2021ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

சோனியா, ராகுல் வாதங்களை கேட்க வேண்டும்

இதற்கிடையில், நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்த முடிவை டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் டிசம்பர் 16-ம் தேதி நீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பிக்க உள்ளது. முன்னதாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு, அவர்கள் தரப்பு வாதங்களைக் கேட்க அவர்களுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்டது.

நீதிமன்றம் சொன்னது என்ன?

புதிய குற்றவியல் சட்டத்தின் (BNSS) பிரிவு 223-ன் படி, நியாயமான விசாரணைக்கு இந்த உரிமை அவசியம் என்று சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே வலியுறுத்தினார். குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தங்கள் தரப்பை முன்வைக்க பிரிவு 223 ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்குகிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த விதிமுறை, பணமோசடி தடுப்புச் சட்டத்துடன் முரண்படவில்லை, மாறாக, குற்றவியல் நடவடிக்கைகளில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துகிறது என்று நீதிமன்றம் கூறியது.