பயணிகள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல், வருவாயை பெருக்கும் விதத்தில், தனியார் நிறுவனங்கள் பெயரில் எக்ஸ்பிரஸ்ரெயில்களை விடும் திட்டத்தை அதிவிரைவில் ரெயில்வே துறை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பெப்சி ராஜ்தானி, கோக் சதாப்தி என பிரபல நிறுவனங்கள் பெயரில் ரெயில்கள் விடப்படலாம். அதேபோலரெயில்வே நிலையங்களும் நிறுவனங்கள் பெயரில் வைக்கப்படும்.

ஒப்புதல்

ரெயில்வே துறையின் இந்த புதிய திட்ட அறிக்கை அனைத்தும் தயாராகி விட்டநிலையில், அடுத்தவாரத்தில் ரெயில்வே வாரியத்தின் ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. ரெயில் முழுவதும் 

இந்த திட்டத்தின்படி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுவதும் விளம்பரம் செய்யும் பணம் செலுத்தும் பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும். அந்த நிறுவனம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முகப்பு முதல் உள்பகுதி வரை அனைத்து இடங்களிலும் தங்களின் தயாரிப்புகள் குறித்து விளம்பரம் செய்ய முடியும். 

வேறு எந்த ஒரு நிறுவனத்தின் விளம்பரமும் இதில் இடம் பெறக்கூடாது.  எந்த நிறுவனம் பணம் கொடுத்து ரெயிலை விளம்பரம் செய்ய எடுக்கிறதோ அந்த நிறுவனத்தின் விளம்பரம் மட்டுமே  இடம் பெறும், ரெயிலும் அந்த நிறுவனத்தின் பெயரில் இயக்கப்படும். 

ஒரே நிறுவனத்துக்கு உரிமை

இது குறித்து  ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ எக்ஸ்பிரஸ் ரெயில்களில் விளம்பரம் செய்யும்  உரிமையை நிறுவனங்களுக்கு பிரித்துப் பிரித்து அளிக்கும் முந்தைய முடிவை ரெயில்வே கைவிட்டு, அந்த ஒட்டுமொத்த ரெயிலில் நீண்ட காலத்துக்கு விளம்பரம் செய்யும் உரிமையையும் ஒரே நிறுவனத்துக்கு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. பிரதமர் மோடியிடம் ஆலோசித்த பின்தான் இந்த திட்டம் முழுமை பெற்றது. விளம்பரத்தின் மூலம் வருவாயைப் பெருக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார். 

ரூ.2 ஆயிரம் கோடி

ரெயில்வே துறை கடும் நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், வருவாயைப் பெருக்க பயணிகள், சரக்கு கட்டணத்தை உயர்த்தினால், வரும் 5 மாநிலத் தேர்தல்களில் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.  இதையடுத்து  விளம்பரங்கள் மூலம் வருவாயைப் பெருக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.  இந்த விளம்பரம் மூலம் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடியை திரட்ட ரெயில்வேஇலக்கு நிர்ணயித்துள்ளது. 


கடந்த ஆண்டு இதேபோல் கிராந்தி ராஜ்தானி, மும்பை-அகமதாபாத் சதாப்தி, அகமதாபாத் மும்பை டபுல்டக்கர் ஆகிய  ரெயிலிலின்வெளிப்பகுதியில் பெயின்ட் அடித்து விளம்பரம் செய்ததன் மூலம், ரூ. 8 கோடி வருவாய் கிடைத்தது. 

பிற திட்டங்கள்

இது மட்டுமல்லாமல் ரெயில்வே பிளாட்பாரங்களில் ஏ.டி.எம். மையங்களை நிறுவுவது, டிஜிட்டல் விளம்பர பேனர்களை வைத்து விளம்பரம் செய்வது, ரெயில்வேக்கு சொந்தமான இடங்களை வாடகைக்கு விடுவது ஆகியவை மூலம் வருவாயை பெருக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.