உலகின் மிக பழமையான மொழி தமிழ். இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழ் மொழி மீது அனைவரிடமும் ஈர்ப்பு ஏற்படுகிறது என்று 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி மனதில் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் வாயிலாக வானொலியில் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில், இந்த ஆண்டின் கடைசி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி உலகின் பழமையான மொழி தமிழ் என்று புகழாரம் சூட்டியுள்ளார். பிஜியின் ராகிராகி பகுதியில் உள்ள ஒரு பள்ளி, மாணவர்கள் கவிதைகள் வாசித்தும், உரைகள் நிகழ்த்தியும் தமிழ் தினத்தைக் கொண்டாடியதாக பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி குறித்து பேசிய பிரதமர் மோடி

இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, ''பிஜியில் இந்திய மொழியையும் கலாச்சாரத்தையும் மேம்படுத்த ஒரு பாராட்டத்தக்க முயற்சி நடந்து வருகிறது. அங்குள்ள புதிய தலைமுறையை தமிழ் மொழியுடன் இணைக்க பல்வேறு மட்டங்களில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம், பிஜியின் ராகிராகி பகுதியில் உள்ள ஒரு பள்ளி தனது முதல் தமிழ் தினக் கொண்டாட்டத்தை நடத்தியது.

அந்த நாள், குழந்தைகள் தங்கள் மொழி மீதான பெருமிதத்தை வெளிப்படையாக வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கியது. அவர்கள் கவிதைகள் வாசித்தனர், உரைகள் நிகழ்த்தினர், மேலும் தங்கள் கலாச்சாரத்தை மேடையில் நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினர்'' என்றார்.

உலகின் பழமையான மொழி தமிழ்

தொடர்ந்து உலகின் பழமையான மொழி தமிழ் என்று பாராட்டிய பிரதமர் மோடி, வாரணாசியில் நடந்த 'காசி தமிழ் சங்கமம்' மொழி கற்பதற்கு முக்கியத்துவம் அளித்ததாகக் கூறினார். "இந்த ஆண்டு, வாரணாசியில் நடந்த 'காசி தமிழ் சங்கமம்' போது, தமிழ் கற்பதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நாட்டின் பிற பகுதிகளில் தமிழ் மொழி மீது ஈர்ப்பு

'தமிழ் கற்கலாம்-தமிழ் கரக்கலாம்' என்ற கருப்பொருளின் கீழ், வாரணாசியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்பு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. தமிழ் மொழி உலகின் பழமையான மொழி. இன்று, நாட்டின் பிற பகுதிகளிலும், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் தமிழ் மொழி மீது ஒரு புதிய ஈர்ப்பு காணப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுதான் மொழியின் சக்தி. இதுதான் பாரதத்தின் ஒற்றுமை" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காசி தமிழ் சங்கமம் 4.0

காசி தமிழ் சங்கமம் 4.0-ன் முதல் கட்டம் வாரணாசியில் டிசம்பர் 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 300 மாணவர்கள் வாரணாசியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தமிழ் கற்க பயணம் செய்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் காசியில் உள்ள பள்ளிகளில் மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.