ஜி20 மாநாட்டுக்கு வரும் உலக தலைவர்கள்: குரங்குகள் அட்டூழியத்தை கட்டுப்படுத்த டெல்லியில் நூதன திட்டம்!
ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் குரங்குகள் அட்டூழியத்தை கட்டுப்படுத்த நூதன திட்டத்தை டெல்லி மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது
ஜி20 தலைமையை இந்தியா ஏற்று நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு தலைப்புகளில் ஜி20 கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லி பிரகதி மைதானம் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகத்தில் (ITPO) உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏரளமான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லிக்கு வரவுள்ளனர். இதனால், தலைநகர் டெல்லி விழா கோலம் பூண்டுள்ளது. நகரம் முழுவதையும் தூய்மைப்படுத்தும் பணிகள், கட்டடங்களுக்கு புதிய பெயிண்ட் அடிப்பது, பழுது நீக்குவது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் குரங்குகள் அட்டூழியத்தை கட்டுப்படுத்த நூதன திட்டத்தை டெல்லி மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் ரீசஸ் எனப்படும் சிறிய வகை குரங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டுக்கு வருபவர்களிடம் அக்குரங்குகள் தங்களது சேட்டைகளை காட்டாத வண்ணம் அதனை கட்டுப்படுத்த, நகரம் முழுவதும் ஆங்காங்கே அச்சுறுத்தும் லாங்கர் வகை குரங்குகளின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த குரங்கு கட்-அவுட்கள் உயிர்ப்புடன் இருப்பது போன்று காட்டுவதற்கு குரங்குகள் போன்று சத்தம் எழுப்பி, மிமிக்ரி செய்யும் 30 முதல் 40 பேர் கொண்டவர்களையும் டெல்லி மாநகராட்சி பணிக்கு அமர்த்தியுள்ளது.
கருப்பு முகத்துடன் கூடிய பெரிய குரங்கான லாங்கூர், சிறிய குரங்குகளை பயமுறுத்துவதற்கு அதிகாரிகளால் பயன்படுத்தப்படுகிறது என மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். “குரங்குகளுக்கு தீங்கு செய்யவோ அல்லது குரங்குகளை அகற்றவோ எங்களால் முடியாது. அவற்றை வன பகுதிகளில் விடுவதே எங்களுக்கு இருக்கும் ஒரே வழி.” டெல்லி முனிசிபல் கவுன்சில் (NDMC) துணைத் தலைவர் சதீஷ் உபாத்யாய் கூறியுள்ளார்.
டெல்லியின் முக்கிய சாலைகள் மற்றும் குரங்குகள் அடிக்கடி வரும் இடங்களில் லாங்கர்களின் கட்-அவுட்களை வைப்பதைத் தவிர, அவைகள் உயிருடன் நடமாடுகின்றன என்ற தோற்றத்தை சிறிய குரங்குகளிடம் உருவாக்க லாங்கர்களின் சத்தத்தை எழுப்பக் கூடிய 30 முதல் 40 பேர் கொண்டவர்களையும் ஆங்காங்கே டெல்லி முனிசிபல் கவுன்சில் நிறுத்தியுள்ளது. கூடுதலா, குரங்குகள் நகருக்குள் வராமல் இருப்பதை உறுதி செய்வதற்காக வனப்பகுதிகளில் உள்ள குரங்குகளுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இண்டியா கூட்டணி: 13 கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பு!
“கடந்த ஒரு வாரமாக நகரத்தில் இந்த கட்-அவுட்களை வைக்கத் தொடங்கியுள்ளோம். இந்த கட்-அவுட்கள் ஏற்கனவே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவை இருக்கும் பகுதிகளுக்கு குரங்குகள் செல்வதை நிறுத்திவிட்டன.” என்று சதீஷ் உபாத்யாய் கூறியுள்ளார்.
இதுபோன்ற லாங்கர் குரங்குகளின் கட்-அவுட்கள் வைப்பது டெல்லியில் இது முதல் முறை அல்ல. பெரிய சர்வதேச நிகழ்வின் போதும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2010ஆம் ஆண்டில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றபோது லாங்கர் குரங்குகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.