இந்தியா கூட்டணி: 13 கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பு!
இந்தியா கூட்டணி சார்பில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும் நடைபெற்று முடிந்துள்ளது. இக்கூட்டணிக்கு இண்டியா என பெயரிடப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மும்பையில் இண்டியா கூட்டணியில் இரண்டு நாட்கள் கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மொத்தம் 28 கட்சிகளை சேர்ந்த 63 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவில், கே.சி.வேணுகோபால் - காங்கிரஸ், சரத் பவார் - என்.சி.பி, மு.க.ஸ்டாலின் - தி.மு.க, அபிஷேக் பானர்ஜி - டி.எம்.சி, சஞ்சய் ராவத் - சிவசேனா (யுபிடி), தேஜஸ்வி யாதவ் - ஆர்.ஜே.டி, லல்லன் சிங் - ஜே.டி.யு, ராகவ் சத்தா - ஆம் ஆத்மி, ஹேமந்த் சோரன் - ஜே.எம்.எம், ஜாதவ் அலிகான் - எஸ்.பி, டி.ராஜா - சி.பி.ஐ, உமர் அப்துல்லா - என்.சி, மெகபூபா முப்தி - பி.டி.பி ஆகிய 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவானது இந்தியா கூட்டணியின் மிக உயர்ந்த முடிவுகளை எடுக்கும் அமைப்பாக செயல்படும் என தெரிகிறது. இந்த புதிய ஒருங்கிணைப்பு குழுவில். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் குமார், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரது பெயர்கள் இடம் பெறவில்லை. ராகுல் காந்தியின் பெயரும் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், “1. இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு இதன்மூலம் தீர்மானித்துள்ளோம். வெவ்வேறு மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, கொடுக்கல் வாங்கல் ஒத்துழைப்போடு கூடிய விரைவில் முடிக்கப்படும்.
2. இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடிய விரைவில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடிவு செய்கிறோம்
3. இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், பல்வேறு மொழிகளில் ஒன்றுபடும் பாரதம், வெற்றிபெறும் இந்தியா என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மற்றும் பிரச்சாரங்களை ஒருங்கிணைப்பதெனத் தீர்மானிக்கிறோம்.” ஆகிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதேசமயம், தொகுதிப் பங்கீட்டை வருகிற 30ஆம் தேதிக்குள் இறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. கட்சிகள் தங்கள் தகவல் தொடர்பு உத்திகளை ஒருங்கிணைக்க, பல்வேறு மொழிகளில் 'ஜூடேகா பாரத், ஜீதேகா இந்தியா' கருப்பொருளில் பிரசாரம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.