இந்திய ராணுவத்தின் புதிய சீருடை.. இனி டாக்- இன் தேவையில்லை..டிஜிட்டல் முறையில் ராணுவ உடை..

இந்திய ராணுவம் தனது வீரர்களுக்கு அதிக வசதி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்த புது சீருடையை, ராணுவ தின அணிவகுப்பில் இன்று வெளியிட்டது.

New army combat uniform

டெல்லியின் கரியப்பா ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் 74-வது தேசிய ராணுவ தின விழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இந்திய இராணுவம் தனது புதிய போர் சீருடையை முதல் முறையாக வெளியிட்டது. பாராசூட் படைப்பிரிவின் கமாண்டோக்கள், புதிய சீருடையில் அணிந்து, ராணுவ தினமான இன்று டெல்லி கான்ட் அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுத்துச் சென்றனர். 2022 ஆம் ஆண்டு ராணுவ தின அணிவகுப்பில் ராணுவம், தனது புதிய போர் சீருடையை வெளிப்படுத்தும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தினருக்கான புதிய சீருடையை தேசிய ஆயத்த ஆடை தொழில்நுட்ப நிறுவனத்துடன் (NIFT) இணைந்து இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது. இந்த புது வடிவ சீருடை அமெரிக்க ராணுவத்தினர் பயன்படுத்தும் டிஜிட்டல் அச்சு வடிவிலான அம்சத்தைக் கொண்டது.பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ராணுவ சீருடைகளை ஆய்வு செய்து, இந்த புதிய டிஜிட்டல் சீருடை இறுதி செய்யப்பட்டுள்ளது. மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளிலும், காடு, மலை, பனிக்காலங்களில் பணியாற்றும் வீரர்களுக்கு உகந்ததாகவும் இந்த ஆடை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சீருடையில் மேல்சட்டையை ராணுவத்தினர் கால்சட்டைக்குள் சொருகிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வெளியே தொங்க விட்டிருக்க வேண்டும். புதிய சீருடை மஞ்சள் மண் நிறம், பச்சை மற்றும் ஆலிவ் நிறங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ தின கொண்டாட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக, வெவ்வேறு காலகட்டத்தில், குறிப்பாக சுதந்திரத்துக்கு முந்தைய காலங்களில் இருந்தது முதல் தற்காலம் வரை இந்திய ராணுவ பயன்படுத்தி வந்த சீருடைகளில் வீரர்கள் அணி, அணியாக அணிவகுத்துச் செல்வர்.அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் வீரர்கள் அணிவகுப்பில் ஏந்திச் செல்வர்.

இந்த சீருடையில் பெண் வீராங்கனைகளுக்கும் வசதியாக இருக்கக் கூடிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தின அணிவகுப்பில் இந்த புதிய சீருடையிலேயே ராணுவ வீரர்கள் அணிவகுத்து செல்வர் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ராணுவ சீருடைகள் வெளி சந்தையில் விற்பனைக்கு வராது. அரசு அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே இதை பெற முடியும். போலிகளை கண்டறியும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சீருடை தேசிய அளவில் முழுமையாக அமல்படுத்த 6 முதல் 8 மாதங்கள வரை ராணுவ பிராந்திய தலைமையகங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios