'ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட்'… ரயில் டிக்கெட்டை விரைவாக முன்பதிவு செய்ய புதிய ஆப் அறிமுகம்

நாடு முழுவதும் ரயில் பயண டிக்கெட்டை விரைவாக முன்பதிவு செய்யும் வகையிலான புதிய ஸ்மார்ட்ஃபோன் செயலியை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.

ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை, ரயில் பயணிகள் தங்களது ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதில், விரைவாக டிக்கெட்களை முன்பதிவு செய்வது மட்டுமின்றி, தட்கல், மகளிர் பிரிவில் சலுகை, பிரீமியம் தட்கல் டிக்கெட், நடப்பு முன்பதிவு உள்ளிட்டவற்றையும் கேட்டுப் பெறலாம் என, ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

இதன்மூலமாக, பயணிகள் தங்களது விருப்பம்போல, டிக்கெட் முன்பதிவு செய்யவோ, பயணத்தில் திருத்தம் செய்யவோ முடியும் என்றும், அதற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் ஐஆர்சிடிசி குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த செயலியைப் பயன்படுத்தி டிக்கெட்டுகள் இருப்பு நிலையை அறிந்து கொள்ளலாம். விரைவான முன்பதிவுக்கு மட்டுமின்றி டிக்கெட்டுகளை ரத்து செய்யவும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

'ஐஆர்சிடிசி ரெயில்வே கனெக்ட்' செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் கொண்ட மொபைல்களில் பயன்படுத்தலாம்.

இந்த புதிய செயலியானது, ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அடுத்த தலைமுறை இ-டிக்கெட்டிங் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.