ஏற்கனவே புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ள நிலையில், புதிதாக 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.
2016-ம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து பழைய ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இதற்கு மாறாக 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுக செய்தது. அதன்பின்னர் புதிதாக ரூ. 200, ரூ. 100, ரூ. 50, ரூ. 10 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான மாதிரி 20 ரூபாய் நோட்டு வெளியாகி உள்ளது. வெளிர் மஞ்சள் நிறத்தில், இந்த ரூபாய் நோட்டுகள் உள்ளன. வழக்கம்போல தேசப் பிதா காந்தியின் படம், உறுதிமொழி, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள், அசோகர் தூண் படம், 15 மொழிகளில் ரூபாயின் மதிப்பு, ரிசர்வ் வங்கி ஆளுநரின் ஒப்பம் என எல்லா அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.


புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சிவப்பு நிறத்திலான பழைய 20 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.