ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே, தவறான பாதையில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதிய கோர விபத்தில் குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளனர். 

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் பெரமனா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது டிப்பர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிப்பர் லாரி சிறிது தூரம் இழுத்துச் சென்றது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீண்ட நேரம் போராடி காரை மீட்டனர். மேலும் காரில் உடல் நசுங்கி உயிரிழந்த 7 பேரின் உடல்களை மீட்டு மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மணல் ஏற்றி வந்த லாரி தவறான பாதையில் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இவ்விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தன்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். டிப்பர் லாரி மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.