நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பலர் இந்திய ராணுவம், எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் உள்ளனர். இவர்கள் வருஷத்திற்கு ஒரு முறை மட்டும் தான் விடுமுறைக்கு வருவது வழக்கம். அப்படி வருடம் ஒருமுறை ஊருக்கு வரும் சமயத்தில் தான் அப்போதுதான் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். 

தற்போது எல்லையில் போர் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், இக்கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர், உறவினர்களுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மறுகால்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் வானமாமலை இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வருஷம் நடந்த பைக் விபத்தில் சுப்பையா இறந்து விட்டார். வானமாமலைக்கு தாய் மற்றும் இரு சகோதரிகள் உள்ளனர். அக்காவுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது.

இந்நிலையில், வானமாமலைக்கும், இதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் வானமாமலை விடுமுறையில் ஊருக்கு வரும்போது திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

இதையடுத்து நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றும் இருதரப்பையும் சேர்ந்த குடும்பத்தினர் ராணுவத்தில் பணியாற்றும் வானமாமலையிடம் ஓய்வுநேரங்களின்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவந்துள்ளனர். 

இதனிடையே காஷ்மீர் புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 25ம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிப்பு நடவடிக்கையை இந்திய விமானப்படை மேற்கொண்டது. 

தொடர்ந்து இந்திய ராணுவமும் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் வானமாமலை இடம்பெற்ற மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராணுவ படைப்பிரிவும் தயார் நிலையில் இருக்குமாறு வீரர்களுக்கு அழைப்பு விடுத்து உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அப்போது வானமாமலை, தனது வருங்கால மனைவியின் உறவினர் ஒருவரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

உருகவைக்கும் வகையில் அனுப்பியுள்ள வாட்ஸ்அப் மெசேஜில், தாங்கள் போருக்கு தயார் நிலையில் இருப்பதாகவும், தாக்குதலுக்கு செல்ல தங்களுக்கு அதிகாரிகளிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போருக்கு செல்லும் நாங்கள் திரும்பி வரலாம், வரலைனா எங்க உடை வீட்டுக்கு வரலாம். மணப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு அவளிடம் சொல்ல வேண்டாம். மற்றது கடவுள் விட்ட வழி. இனி போன் பேச முடியாது. காலையில கூப்பிடுதேன் என்று உருக்கமாக  அனுப்பியிருக்கிறார். 

ராணுவத்தினருக்கான அழைப்பு உத்தரவு தற்காலிகமாக காத்திருப்பில் உள்ளதால் போர்க்களத்திற்கு செல்வது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக வானமாமலை தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். நாடு காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போர் வீரர்களின் போர்க்கால மனநிலை எப்படி இருக்கும் என்ற உணர்ச்சி மிகுந்த மெசேஜ் சமூகவலைத்தளங்களில், பல வாட்ஸ் அப் குரூப்பிலும் வைரலாகி வருகிறது.