மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
மாநில அரசுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு , தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வு (NEET) நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது.
இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.ஆனால் அடுத்த கல்வியாண்டு முதல் மருத்துவ சேர்க்கைகான தேசிய அளவில் பொது நுழைவு தேர்வு கட்டாயம் என நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில் 2017-2018- கல்வியாண்டில் நீட் மருத்துவ நுழைவு தேர்வு கட்டாயம் நடைமுறைப் படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ‘நீட்’ தேர்வை தங்கள் மாநில மொழியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தன. ‘நீட்’ தேர்வு இந்த ஆண்டு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் நடைபெறுகிறது. இதில் மாற்றம் செய்து அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் நாடாளுமன்றத்தில் பேசுகையில், “ 2017-ல் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தமிழ், அசாம், வங்கம், மராத்தி, தெலுங்கு மொழிகளில் நடத்தப்படும். இந்த நீட் தேர்வினால் மாநிலங்களின் இட ஒதுக்கீடு பாதிக்கப்படாது . மேலும் மருத்துவ இளம், முதுகளைப் படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டை மாநில அரசு முடிவு செய்யும்'' என்று தெரிவித்தார்.
மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் தேர்வு இது வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால், பல மாநிலங்களில் அவர்களின் தாய் மொழிகளில் படித்த திறமையான மாணவர்களுக்கு கூட மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழிலும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கிராமப் புற மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவப் படிப் புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த 2006-ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்கு முன் தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நுழைவுத் தேர்வு நடந்தது.
