என்ஜீனியரிங் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவு தேர்வு

மருத்துவப்படிப்புக்கு ‘நீட்’ தேர்வைத் தொடர்ந்து அறிமுகம் 

 

மருத்துவப்படிப்புகளுக்கு ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வு கொண்டு வந்ததைத் தொடர்ந்து,  அனைத்து பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு கொண்டு வர மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

இம்மாத இறுதியில் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவுடன்(ஏ.ஐ.சி.டி.இ.)மத்திய மனித வளத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்த உள்ளது. அப்போது இறுதி முடிவு எட்டப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் நீட்  தேர்வு நடக்கிறது.

இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ‘நீட்’ தேர்வை தங்கள் மாநில மொழியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் தமிழலிலும் நீட் தேர்வை மாணவர்கள் எழுத உள்ளனர்.

சிபிஎஸ்இ கேள்விமுறையும், ‘நீட்’ தேர்வுமுறையும் ஒரேமாதிரி ஆனவை. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நீட் தேர்வு எளிதாக இருக்கும். மனப்பாடம் சார்ந்த மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை அதற்கு தயார்படுத்த பயிற்சி அவசியம்.

‘நீட்’ தேர்வு வந்தால் தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வெளிமாநில சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சேர்ந்து விடுவார்கள். கிராமப்புறங்களில் இருந்து வரும் ஏழை மாணவர் களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு பறிபோகும்.  இதனால், நீட் தேர்வு குறித்து அதிருப்தி இருந்து வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வைத் தொடர்ந்து அனைத்து பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக இந்த மாத இறுதியில அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவுடன்(ஏ.ஐ.சி.டி.இ.)மத்திய மனித வளத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்த உள்ளது. அப்போது இந்த விவகாரம் குறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முக்கிய முடிவு எடுப்பார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்து பொறியல்  படிப்புகளுக்கு ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வை நடத்த அரசு திட்டவட்டமாக இருப்பதால்,  இந்த மாத இறுதிக்குள் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. பொறியல் படிப்புகளில் தரத்தையும், வெளிப்படைத்தன்மையும் கொண்டு வருவதற்கு பொதுநுழைவுத் தேர்வு திட்டம் கொண்டு வரப்படுகிறது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், அனைத்து அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு மாணவர்கள் கண்டிப்பாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியமாகும்.

இப்போதுள்ள நிலையில், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஜே.இ.இ. அடிப்படையிலான தேர்வு நடத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் இந்த தேர்வு நடத்தப்படும்.

அதுமட்டுமல்லாமல் ‘எக்சிட் டெஸ்ட்’ என்ற ஒரு தேர்வும்  கொண்டு வரப்படுகிறது. பொறியியல் பட்டப்படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்கள் இந்த தேர்வு எழுதினால், தாங்கள் தகுதியானவர்கள், திறமையானவர்கள் என்பதற்கான சான்றிதழும், வேலைவாய்ப்புகளும் எளிதாக கிடைக்க இந்த தேர்வு உதவும் என கூறப்படுகிறது.