ஜக்தீப் தன்கருக்கு ஆதரவாக மாநிலங்களவையில் நின்ற எம்பிக்கள்; மதிப்பு வைத்து இருப்பதாக மிமிக்ரி எம்பி பல்டி!!
இந்திய துணை ஜானாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கரை மிமிக்ரி செய்த விஷயத்தில் இன்று மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் ஒரு மணி நேரம் நின்று தங்கருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்திய துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பி கல்யாண் பேனர்ஜி மிமிக்ரி செய்து விமர்சித்து இருப்பதற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் போல மிமிக்ரி செய்து காண்பித்தார், இதை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். உடன் இருந்த எம்பிக்கள் இதைப் பார்த்து சிரித்தனர். இது விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. இதையடுத்து இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.
அமெரிக்க மண்ணில் படுகொலை சதித்திட்டம்: மவுனம் கலைத்த பிரதமர் மோடி!
இதற்கு உடனடியாக கண்டனம் தெரிவித்து இருந்த ஜக்தீப் தன்கர், சபை நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாகவும், சபையை கீழ்த்தரமாக விமர்சித்து இருப்பதை கண்டிப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் அப்போது அவையில் இருந்த காங்கிரஸ் எம்பி ப. சிதம்பரத்தை பார்த்து, நீங்கள் மூத்த அவை உறுப்பினர். அவைத் தலைவரை கேலியாக சித்தரிக்கும்போது எனது மனநிலை எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்'' என்று கேட்டு இருந்தார்.
இதையடுத்து ஜக்தீப் தன்கர் தனது எக்ஸ் பதிவில், இதுகுறித்து தன்னிடம் பிரதமர் பேசியதாகவும், கவலை தெரிவித்து இருந்ததாகவும் பதிவிட்டு இருந்தார். தனது எக்ஸ் பதிவில், ''புனித நாடாளுமன்ற வளாகத்தில் சில கவுரவ உறுப்பினர்களின் கேவலமான நாடகங்கள் குறித்து பிரதமர் மிகுந்த வேதனை தெரிவித்தார். இருபது ஆண்டுகளாக இதுபோன்ற அவமானங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும், ஆனால் இந்திய துணை ஜனாதிபதி போன்ற அரசியலமைப்பு அலுவலகத்திற்கு அதுவும் நாடாளுமன்றத்தில் இதுபோன்று நடக்கலாம் என்பது துரதிர்ஷ்டவசமானது'' என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
நான் அவரிடம் சொன்னேன், ''ஒரு சிலரின் கோமாளித்தனங்கள் எனது கடமையைச் செய்வதிலிருந்தும், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நிலைநிறுத்துவதில் இருந்தும் என்னைத் தடுக்காது. அந்த மாண்புகளை காப்பதற்கு எனது மனதின் அடித்தளத்தில் இருந்து உறுதி ஏற்று இருக்கிறேன். எந்த அவமானமும் என் பாதையை மாற்றாது'' என்று துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், மிமிக்ரிக்கு மறுநாளான இன்று, இந்த விஷயத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் ஒரு மணி நேரம் நின்று, தலைவர் ஜகதீப் தன்கருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஜக்தீப் தன்கர் மீது உயரிய மரியாதை வைத்து இருப்பதாக மிமிக்ரி செய்து இருந்த கல்யாண் பானர்ஜி எம்பி தற்போது தெரிவித்துள்ளார்.