NDA Ministers Skip Iftar Hosted by President At Rashtrapati Bhavan
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ரம்ஜான் பண்டிகையையொட்டி தனது மாளிகையில் அளித்த இப்தார்விருந்து நிகழ்ச்சியில் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட எந்த மத்திய அமைச்சர்களும் பங்கேற்காமல் புறக்கணித்து, அவமதிப்பு செய்தனர்.
கடந்த ஆண்டு இப்தார் விருந்தில் கலந்து கொண்ட மத்திய சிறுபான்மையினத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூட இந்த ஆண்டு விருந்தில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டார்.
கடைசி இப்தார்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 5 ஆண்டுகளாக, அதாவது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபோதும் இப்தார் விருந்து அளித்து வருகிறார். ஆனால், இந்த ஆண்டு பிரணாப் முகர்ஜி அளித்த இப்தார் விருந்து என்பது மிகவும் சிறப்புக்கு உரியது, நினைவில் இருக்கக் கூடியது.
ஏனென்றால், அடுத்த மாதத்துடன் ஜனாதிபதி பதவியில் இருந்து பிரணாப் முகர்ஜி ஓய்வு பெறப்போகிறார் என்பதால், இந்த இப்தார் விருந்தில் அனைத்து அமைச்சர்களும், பிரதமர் மோடியும் பங்ேகற்பார்கள், பிரிவு உபசாரம் போல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஒருவர்கூட வரவில்லை
இதற்காக ஜனாதிபதி மாளிகையிலும் பிரதமர் மோடி முதல், அனைத்து அமைச்சர்களின் வருகைக்கு ஏற்றார்போல் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. ஆனால், இப்தார் விருந்து முடியும் வரை பிரதமர் மோடி உள்ளிட்ட, மத்திய அமைச்சர்கள் ஒருவர் கூட விருந்தில் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.
பங்ேகற்பு
அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீராம் யெச்சூரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், மாநிலங்கள் அவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், பாகிஸ்தான் துணைத் தூதர் அப்துல் பாசித் உள்ளிட்டோர் இப்தார் விருந்தில் பங்கேற்றனர்.
மேலும் முன்னாள் எம்.பி. மோசினா கிட்வால், இஸ்லாமிய கலாச்சார மையத்தின் தலைவர்சிராஜூதீன் குரோஷி, நாடக நடிகர் அமீர் ராசா ஹூசைன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அவர் அப்படி?.. இவர் இப்படி?..
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது பதவிக்காலத்தில் மதச்சார்பற்ற தன்மையை வௌிப்படுத்தும்நோக்கில் இப்தார் விருந்து அளித்துள்ளார். ஆனால், இப்போதுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு இப்தார் விருந்தில் பங்கேற்பதிலும், நடத்துவதிலும் நாட்டம் காட்டுவதில்லை. குறிப்பாக மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலும் இப்தார் விருந்தை நடத்தியதும் இல்லை, பங்கேற்றதும் இல்லை. இதேபோல அவரின் அமைச்சரவை உறுப்பினர்களும் விருந்தில் பங்கேற்றதில்லை.
இதுபோல் பார்த்தது இல்லை...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “பிரணாப் அளித்த இப்தார் விருந்தில் அரசு சார்பில் ஒரு மத்திய அமைச்சர்கூட, ஒரு அரசு அதிகாரி கூட, ஒரு பா.ஜனதா தலைவர்கூட பங்ேகற்கவில்லை. இத்தனை ஆண்டுகளில் இது போல் ஜனாதிபதி அளித்த விருந்தை புறக்கணித்த மத்திய அரசை நான் பார்த்தது இல்லை’’ எனத் தெரிவித்தார்.
சப்பைக்கட்டு...
இது குறித்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியிடம் கேட்டபோது, “ இப்தார் விருந்து அளித்த நேரத்தில் எனக்கு முக்கியமான கூட்டம் இருந்தது. அந்த அவசரமான கூட்டத்தை நான் தவறவிடக்கூடாது என்பதால் அங்கு சென்றேன். கூட்டம் மாலை தொடங்கி இரவு வரை நடந்தது. பிரதமரும் அடுத்த நாள் வௌிநாடு செல்ல இருந்தார் என்பதால் பரபரப்பாக இருந்துவிட்டேன்’’ என்றார்.
