Narayanasamy compliments about Karunanidhi
கருணாநிதி என் மானசீக தலைவர் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் திமுக சார்பில் ஆய்வுநூல் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் கருணாநிதி குறித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுவது என் வழக்கம் என்றார்.
அப்போதெல்லாம் ஒரு கட்சிக்குத் தலைவராக இருந்து எப்படி வழிநடத்துகிறார் என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவேன். மக்கள் சேவையே மகேசன் சேவையென செயல்படும் கலைஞரை, என் மானசீக தலைவராக நான் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்றார்.

கடந்த வாரம் நானும் எம்.எல்.ஏ, லட்சுமி நாராயணனும் கலைஞரை சந்தித்தோம். எங்களைப் பார்த்தவுடன் புன்னகைத்தார் கலைஞர். அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்று உடனிருந்த கனிமொழியிடம் கூறிவிட்டு நாங்கள் புறப்படத் தயாரானோம்.
அப்போது, கலைஞர் கையை அசைத்து எங்களிடம் ஏதோ பேச முயற்சித்தார். இந்த நிலையிலும் அவர் பேச நினைத்ததே எங்களுக்கான பெருமைதான். விரைவில் அவர் குணம் பெறுவார். கட்சியை வழி நடத்துவார் என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
