இந்தியாவில் கோர தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்றின் பரவல் மத்திய, மாநில அரசுகளின் கடும் முயற்சியால் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கோவோக்சின், கோவிட் ஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களை தொடர்ந்து,  நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாஜக எம்.பி. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது கட்சியினர் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மக்களவை தொகுதி எம்.பி. நத் குமார் சிங் சவுகான். போபாலில் வசித்து வந்த இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில்  வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த  நந் குமார் சிங் சவுகான், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். பிரபல தலைவர் நந் குமார் சிங் சவுகான் நம்மை விட்டு சென்றுவிட்டார். பாஜக திறமையான, அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்துவிட்டது. இது எனக்கு தனிப்பட்ட இழப்பு என மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கந்த்வா மக்களவை தொகுதி எம்.பி. நத் குமார் சிங் சவுகான் மறைவு வருத்தமளிக்கிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள், நிர்வாக திறன், மத்தியப்பிரதேசம் முழுவதும் பாஜகவை வலுப்படுத்த ஆற்றிய பங்களிப்பிற்காக நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.