மைசூரு சிற்பி செதுக்கிய சிலை... அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு
மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய சிலை தான் அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ளதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், அந்த கோவிலில் நிறுவப்பட உள்ள சிலை தற்போது இறுதி செய்யப்பட்டு உள்ளது. கர்நாடகாவின் புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய சிலை தான் ராமர் கோவிலில் வணங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “அயோத்தி ராமர் கோவிலுக்கான சிலை தேர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டின் புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜால் செதுக்கப்பட்ட ராமர் சிலை அயோத்தியில் நிறுவப்படும்” என்று குறிப்பிட்டு ராமர் சிலையுடன் யோகிராஜ் போஸ் கொடுக்கும் புகைப்படத்தையும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி பகிர்ந்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவும் சமூக வலைதளம் வாயிலாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார், இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜால் செதுக்கப்பட்ட ராமர் சிலை, அயோத்தியின் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் கோயிலில் நிறுவ தேர்வு செய்யப்பட்டு உள்ளது, இது மாநிலத்தின் ஒட்டுமொத்த ராம பக்தர்களின் பெருமையையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கி உள்ளது. சிற்பி அருணுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
தான் செதுக்கிய சிலை தேர்வாகி உள்ளது குறித்து சிற்பி அருண் யோகிராஜ் கூறியதாவது : “ராம் லல்லா சிலையை செதுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிற்பிகளில் நானும் ஒருவன் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அது கடவுள் அவதாரத்தின் சிலை என்பதால் அது தெய்வீகமாக இருக்க வேண்டும். அந்த சிலையைப் பார்ப்பவர்கள் தெய்வீகத்தை உணர வேண்டும். குழந்தை முகத்துடன் தெய்வீக அம்சத்தையும் மனதில் வைத்து, ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு முன்பு நான் இந்த சிலை செய்யும் பணியைத் தொடங்கினேன்.
அந்த சிலை தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிலை தேர்வை விட, மக்கள் அதைப் பாராட்ட வேண்டும். அது கூடுதல் மகிழ்ச்சியை கொடுக்கும்” என அவர் கூறினார். கேதார்நாத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் சிலை மற்றும் டெல்லியில் இந்தியா கேட் அருகே உள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலை ஆகியவற்றை யோகிராஜ் தான் வடிவமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 2024ல் ராமராஜ்யம்.. இந்தியாவில் நடக்கப்போவது இதுதான்.. ஆருடம் சொன்ன அயோத்தி கோவில் தலைமை அர்ச்சகர்