சென்னை அருகே ரயில் விபத்து; தேவையான அனைத்து பணிகளும் துரிதமாக நடக்கிறது - முதல்வர் ஸ்டாலின் அறிக்கை!
Mysuru Darbhanga Express : சென்னை ஆந்திர எல்லையில் உள்ள கவரப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, அவ்வழியாக அதிவேகமாக வந்த பயணிகள் விரைவு ரயில் ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த மோதலில் பயணிகள் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டது மட்டுமல்லாமல் பல பெட்டிகள் நிலைகுலைந்துள்ள நிலையில் பயணிகள் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பயணிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியில் செல்லும் காட்சிகளும் வெளியாகி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக இப்போது அங்கு மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் இந்த ரயில் மோதலில் சில பெட்டிகளில் தீப்பிடித்து இருப்பதையும் மீட்பு குழுவினர் உறுதி செய்திருக்கின்றனர்.
இரண்டு மணிநேர போராட்டம்; திருச்சியில் பத்திரமாக தரையிறங்கிய விமானம் - பைலட்டுக்கு குவியும் பாராட்டு!
மேலும் இந்த விபத்தில் ரயிலின் சுமார் 10 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில் விபத்து நடந்த இடத்தின் அருகே இருந்த பொதுமக்களுடன் இணைந்து இப்பொது தமிழக காவல்துறையினரும் பயணிகளை மீட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ள நிலையில், தமிழக அமைச்சர் நாசர், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் ஐபிஎஸ் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
சென்னையில் உள்ள மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்குமாறு சுகாதாரத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பலத்த காயம் அடைந்த பயணிகளை உடனடியாக சென்னை மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் விபத்து குறித்து வெளியான முதல் கட்ட தகவலில் சிக்னல் தவறாக இருந்ததன் காரணமாகவே இந்த ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் அந்த வண்டிக்கு கிறீன் சிக்னல் கொடுக்கப்பட்ட, அந்த ரயில் சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. இந்த சூழலில் ரயில்கள் பொதுவாக பயணிக்கும் லுக் லைனுக்கு அந்த ரயில் மாறிய போது, அதன் வேகத்தை 90 கிலோ மீட்டராக ஓட்டுனர் குறைத்துள்ளார். அப்போது தான் ஏற்கனவே அந்த லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது இந்த பயணிகள் ரயில் அதிவேகமாக மோதி உள்ளது.
சென்னை அருகே நடந்த இந்த விபத்தில் இதுவரை 90 சதவீதத்திற்கும் அதிகமான பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும், இதுவரை உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், மீட்கப்பட்ட பயணிகள் பத்திரமாக இருப்பதாகவும் ரயில்வே துறை அதிகாரி திலீப் தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் இந்த விபத்து குறித்து ட்வீட் செய்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது என்றும், அவர்களை உடனடியாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த ரயிலில் பயணித்த பயணிகள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கான வசதிகளும் தற்பொழுது செய்யப்பட்டு வருகிறது என்றும் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகளில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.