“ எனது மனைவி தற்கொலை செய்துகொள்வார்” நூதன காரணங்களை கூறி அமைச்சர் பதவி பெற்ற எம்.எல்.ஏக்கள்
மகாராஷ்டிரா நூதனமான காரணங்களை கூறி பல எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவியை பெற்றதாக ஏக்நாத் ஷிண்டே பிரிவு எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிவசேனாவின் எம்.எல்.ஏவும் தலைமை கொறாடாவுமான பாரத் கோகவாலே, சிவசேனா எம்.எல்.ஏக்கள் எப்படி அமைச்சர்கள் பதவிகள் பெற்றனர் என்று கூறியுள்ளார். பல எம்.எல்.ஏக்கள் வினோதமான காரணங்களை கூறி அமைச்சர் பதவியை பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ தான் அமைச்சராகவில்லை எனில் தனது மனைவி தற்கொலை செய்து கொள்வார் என்று கூறி ஒரு எம்.எல்.ஏஅமைச்சர் பதவி பெற்றார். மத்திய அமைச்சர் நாராயண் ரானே தனது கதையை முடித்துவிடுவார் என்று கூறி அமைச்சர் பதவியை பெற்றுள்ளார். மற்றொருவர் அமைச்சரவையில் தன்னை சேர்க்கவில்லை எனில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.” என்று தெரிவித்தார்.
எனினும் மக்கள் விரும்பியதால் தான் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார் என்றும் கோகவாலே தெரிவித்துள்ளார். ரெய்காடில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “ நமது முதலமைச்சர் பிரச்சனையில் இருப்பது எனக்கு தெரியவந்தது. எனவே நான் அமைச்சராகும் போட்டியில் இருந்து விலகிவிட்டேன்.” என்று தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே தலைமைக்கு எதிராக களமிறங்கிய 40 அதிருப்தி எம்.எல்.ஏக்களில் பாரத் கோகவாலேவும் ஒருவர். அவர் கடந்த ஆண்டு முதல் அமைச்சராவதற்கு காத்துக்கொண்டிருக்கிறார். முன்னதாக கடந்த ஜூன் மாதம் பேசிய பாரத் கோகவாலே, எப்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டாலும் எனது பெயர் எப்போதும் அந்த பட்டியலில் இருக்கும் என்று கூறியிருந்தார்.
மகாராஷ்டிர அமைச்சரவை கடந்த ஜூன் 2-ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். எனினும் ஷிண்டே பிரிவு எம்.எல்.ஏக்கள் யாரும் அமைச்சராக பதவியேற்கவில்லை. அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.