'பயப்படாதீங்க அதானி பற்றி பேச மாட்டேன்': நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் ராகுல் மாஸ் பேச்சு!

அதானி பற்றி பேச மாட்டேன் எனவே பாஜகவினர்  அச்சப்பட வேண்டாம் என மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

My speech today is not about Adani rahul gandi speech in loksabha on no confidence motion

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை அவைக்கு வரவழைத்து பேச வைப்பதற்காக, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கடந்த ஜூலை 26 ஆம் தேதி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் வழங்கினார். அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக அறிவித்த மக்களவை சபாநாயகர், ஆகஸ்ட் 8, 9 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.

அதன்படி, மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது நேற்றும், இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி உரையைத் தொடங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்த கவுரவ் கோகாய், அந்த தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்து பேசினார்.

நீதிமன்ற உத்தரவுப்படி, தகுதி நீக்க உத்தரவு ரத்தாகியுள்ளதால் மீண்டும் அவைக்கு வந்துள்ள ராகுல் காந்தி, நேற்றைய தினமே பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி இன்று பேசினார். அப்போது, அதானி என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்த தொடங்கிய உடனேயே பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அதானி பற்றி பேச மாட்டேன்; எனவே, நான் பேசுவதை கேட்டு நீங்கள் அச்சப்பட வேண்டாம் ராகுல் காந்தி பதிலளித்தார்.

“என்னை மீண்டும் மக்களவையில் இணைத்ததற்கு சபாநாயகருக்கு நன்றி. நான் கடைசியாக பேசிய போது, உங்களை புண்படுத்தியிருக்கலாம். ஏனென்றால் நான் அதானி மீது அதிக கவனம் செலுத்தினேன். அது உங்கள் மூத்த தலைவர் வேதனைப்படுத்தியிருக்கலாம். ஒருவேளை அந்த வலி உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நான் உண்மையைப் பேசினேன்.” என்று ராகுல் காந்தி பேசத்தொடங்கியதுமே பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

துணை ராணுவப் படை மீது மணிப்பூர் காவல்துறை வழக்குப்பதிவு: ரவிக்குமார் எம்.பி., கவன ஈர்ப்பு நோட்டீஸ்!

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, நான் இன்று மோடி அதானி உறவு குறித்து பேசப்போவதில்லை எனவே நீங்கள் பயப்பட வேண்டாம் அமைதியாக இருங்கள் என பாஜக எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார். பிரபல பாரசீக கவிஞர் ரூமியை மேற்கோள் காட்டி பேசிய ராகுல் காந்தி, ‘நான் இன்று என் மனதில் இருந்து பேச விரும்புகிறேன். எப்போதும் போல் இன்று அரசாங்கத்தை கடுமையாக தாக்கி பேசப்போவதில்லை.’ என்றார்.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ஒரு பெண் ராகுல் உங்களுடன் நான் நடக்கிறேன் என கடிதம் கொடுத்ததை நினைவுகூர்ந்த ராகுல் காந்தி, அந்த பெண் மட்டுமல்ல, பாரத் ஜோடோவின் போது பலரும் தனக்கு பலம் அளித்ததாக குறிப்பிட்டார். 

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடியை தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு செல்லவில்லை. பிரதமர் மோடி மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதவில்லை. மணிப்பூரை பிரதமர் மோடி இரண்டாக பிரித்துள்ளார். தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது” என்றார்.

மணிப்பூரில் ஒரு தாயுடன் நடந்த உரையாடலை ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார். அந்த தாயின் மகன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். அந்த தாயுடன் நடந்த உரையாடலை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி, ‘இரவு முழுவதும், நான் என் மகனின் உடலுடன் கிடந்தேன், நான் பயந்து, என் வீட்டை விட்டு வெளியேறினேன்’ என அந்த தாய் தம்மிடம் கூறியதாக தெரிவித்தார். அத்துடன், மணிப்பூரில் இந்தியாவை கொலை செய்து விட்டீர்கள் என்றும் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்தியாவை கொலை செய்து விட்டீர்கள் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக எம்பிக்கள் மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.  ‘வடகிழக்கில் தீவிரவாதத்திற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். அவர்கள் வடகிழக்கை கொன்றனர்’ என மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “இந்தியா நமது மக்களின் குரல். மணிப்பூரில் அந்தக் குரலைக் கொன்றீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றீர்கள். நீங்கள் மணிப்பூர் மக்களை கொன்றீர்கள். இந்தியாவை கொன்றீர்கள். நீங்கள் துரோகிகள். நீங்கள் தேசபக்தர்கள் இல்லை” என ஆவேசமாக பேசினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios