எனது மகளால்தான் மருமகன் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரானார்; சுதா நாராயண மூர்த்தி பெருமிதம்!!
என்னுடைய மகள் அக்ஷதா மூர்த்திதான் அவளது கணவரை பிரிட்டனின் பிரதமராக்கினார். அதேபோல் நான்தான் எனது கணவர் நாராயண மூர்த்தியை தொழிலதிபராக உருவாக்கினேன் என்று சுதா நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றுக் கொண்டபோது உலகமே திரும்பிப் பார்த்தது. நம்மை அடிமைப்படுத்தி வைத்து இருந்தவர்களின் தேசத்தை இந்தியர் ஒருவர் ஆட்சி செய்யப் போகிறார் என்ற பெருமிதம் எதிரொலித்தது. மருமகனின் பெருமையை மாமியார் சுதா நாராயண மூர்த்தியும் பாராட்டத் தவறவில்லை. அவரது வளர்ச்சியை புகழ்ந்தார். ஆனால், இன்று தனது மகள் அக்ஷதா தான் மருமகன் ரிஷி சுனக்கை பிரிட்டன் நாட்டின் பிரதமராக்கினார் என்று தெரிவித்து இருக்கிறார்.
தற்போது இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ''நான் எனது கணவரை தொழிலதிபராக உயர்த்தினேன். எனது மகள் அவளது கணவரை பிரிட்டன் நாட்டின் பிரதமராக உயர்த்தி இருக்கிறார். இதற்குக் காரணம் மனைவியின் மகிமை. மனைவி எப்படி கணவனை மாற்ற முடியும் என்று பாருங்கள். ஆனால் என்னால் என் கணவரை மாற்ற முடியவில்லை. நான் என் கணவரை தொழிலதிபராக்கினேன். என் மகள் அவளது கணவரை பிரதமராக்கினாள்" என்று சுதா மூர்த்தி இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்கும், அக்ஷதா மூர்த்தியும் 2009 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். உலகப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா காதலித்து ரிஷியை திருமணம் செய்து கொண்டவர். அக்ஷதாவுக்கு மட்டும் இன்று 730 மில்லியன் பவுண்ட் அளவிற்கு சொத்து உள்ளது. சமுதாயத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர். அவரது பெற்றோர் நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி இருவரும் இன்போசிஸ் நிறுவனர்கள். பிரிட்டனின் இளம் வயது பிரதமராக பதவியேற்றுக் கொண்டவர் ரிஷி சுனக். பிரிட்டனின் எம்பியாக ஏழு வருடங்கள் மட்டுமே இருந்தார். அதற்குள் பிரதமராகவும் பொறுப்பேற்றார்.
உலக பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரபலம்; யார் அவர்?
மேலும் அந்த வீடியோவில் பல ஆண்டுகளாக தனது குடும்பம் வியாழக்கிழமை விரதம் கடைபிடித்து வருவதாக சுதா மூர்த்தி கூறுகிறார். ''வியாழக்கிழமை தொழில் துவங்க நல்ல நாள். வியாழன் தான் இன்ஃபோசிஸ் ஆரம்பித்தோம். அதுமட்டுமில்ல, நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணின நம்ம மருமகன், அவங்க முன்னோர் காலத்துல இருந்து 150 வருஷம் பிரிட்டன்ல இருக்காங்க. அவர்கள் மிகவும் ஆன்மீகவாதிகள். திருமணம் முடிந்த பின்னர் ஏன் அனைத்தையும் வியாழன் அன்று தொடங்குகிறீர்கள் என்று மருமகன் எனது மகளிடம் கேட்டுள்ளார். நாங்கள் ராகவேந்திரர் ஸ்வாமியை வழிபடுகிறோம் என்று தெரிவித்து இருக்கிறாள். இதையடுத்து, வியாழன் தோறும் நல்ல நாள் என்று கூறி அவர் விரதம் இருப்பார். மருமகனின் அம்மா திங்கட்கிழமை விரதம் இருப்பார். ஆனால் எங்கள் மருமகன் வியாழக் கிழமைகளில் விரதம் இருப்பார்'' என்று சுதா நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.