பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி பிரதமர் மோடி பேசியதையடுத்து, முஸ்லிம் சட்ட வாரியம் நள்ளிரவில் கூடி ஆலோசித்துள்ளது
வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று மத்தியப்பிரதேசம் சென்றார். அப்போது, அம்மாநில தலைநகர் போபால் நகரில் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டு விதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது என பொது சிவில் சட்டத்தை வலியுறித்தி பேசினார்.
நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்பு சாசனம் கூறுகிறது. இதற்கேற்ப பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாஜக யாரையும் சமாதானப்படுத்தி வாக்கு வங்கி அரசியல் செய்யாது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, முத்தலாக்கை கடுமையாக விமர்சித்து பேசினார். “முத்தலாக் நடைமுறையை ஆதரிப்பவர்கள் முஸ்லிம் மகள்களுக்கு பெரிய அநீதியை இழைக்கிறார்கள். எனவேதான் முத்தலாக் நடைமுறையை ரத்து செய்த காரணத்தால் முஸ்லிம் பெண்கள் பாஜகவை ஆதரிக்கின்றனர். முஸ்லிம் சமூகத்தில் பல பிளவுகள் காணப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. நாட்டின் குடிமக்களுக்காக 'சப்கா சத் சப்கா விகாஸ்' என்ற சிந்தனையுடன் பாஜக செயல்படுகிறது.” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பொது சிவில் சட்டத்தை பிரதமர் மோடி கடுமையாக வலியுறுத்தி பேசிய நிலையில், இந்தியாவின் உயர்மட்ட முஸ்லிம் அமைப்பான அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்று இரவு அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. காணொலி மூலம் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தின் சட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவில், வழக்கறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் தெரிவித்த கருத்துகளை கருத்தில் கொண்டு, சட்ட ஆணையத்திடம் கருத்துகளை சமர்ப்பிக்க அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு மசோதாவை விரைவில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைப் பெறும் புதிய நடைமுறையை சட்ட ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.
ஹிஜாப் அணிய அனுமதி வேண்டும்.. கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதிய 7 மருத்துவ மாணவிகள்!
பொது சிவில் சட்டம் என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் வகையிலான ஒரே மாதிரியான சட்டம். மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்பை பொது சிவில் சட்டம் குறிக்கிறது. அரசியலமைப்பின் 44ஆவது பிரிவு இதற்கு வழிவகை செய்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பொது சிவில் சட்டத்தை தயாரிப்பதற்கான குழுவை அமைக்கும் தனிநபர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில், இதேபோன்ற மசோதாக்கள் அறிமுகம் செய்யட்டாலும், அவை மாநிலங்களவையை சென்றடையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பொது சிவில் சட்டம் தொடர்பான பிரதமரின் கருத்து பேசுபொருளாகி நாடு முழுவதும் தீவிரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் முன்னுரிமையில் இருக்கும் பொது சிவில் சட்டம் தொடர்பான பிரதமரின் கருத்து நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரவுள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
