பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்; பிரதமர் இரங்கல்!!
மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் முன்னோட்டத்தை கணித்து பிரம்மாவாக திகழ்ந்து வந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் முன்னோட்டத்தை கணித்து பிரம்மாவாக திகழ்ந்து வந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா திடீரென மரணம் அடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் உடல் நலக்குறைவு காரணமாக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பங்குச் சந்தையில் இவரை பங்குச் சந்தையின் பிதா மகன் என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படுவது உண்டு.
இவருக்கு கிட்னி தொந்திரவு இருந்த காரணத்தினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இவர் வர்த்தகர் மட்டுமின்றி சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆகவும் இருந்து வந்தார். நாட்டிலேயே பணக்காரர்களில் ஐவரும் ஒருவர். இவரது இன்றைய சொத்து 43,800 ஆயிரம் கோடி (5.8 பில்லியன் டாலர்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆகாஷ் ஏர் விமானம் துவக்க நிகச்சியில் கடைசியாக இடம் பெற்று இருந்தார்.
இந்தியாவின் வாரன் பபெட்.. ஷேர் மார்க்கெட் கில்லியாக அறியப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா யார்?
ஜுன்ஜுன்வாலா ஹங்காமா மீடியா மற்றும் ஆப்டெக் நிறுவனத்தின் தலைவராகவும், வைஸ்ராய் ஹோட்டல்ஸ், கான்கார்ட் பயோடெக், ப்ரோவோக் இந்தியா மற்றும் ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகியவற்றின் இயக்குநராகவும் இருந்து வந்தார்.
ஜுன்ஜுன்வாலா கல்லூரியில் படிக்கும் போது, பங்குச் சந்தையில் ஈடுபடத் துவங்கினார். அவர் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் சேர்ந்தார், ஆனால் அவர் அதற்கான வேலையில் நாட்டம் காட்டவில்லை. மும்பை பங்குச் சந்தையில் தனது ஈடுபாட்டை காட்டினார். ஜுன்ஜுன்வாலா 1985ல் பங்குச் சந்தையில் ரூ.5,000 முதலீடு செய்தார். செப்டம்பர் 2018க்குள் அந்த மூதலீடு ரூ.11,000 கோடியாக வளர்ந்தது. இன்று இந்த முதலீட்டு மதிப்பு 31,904 கோடியாக உயர்ந்துள்ளது.
தனது தந்தை அவரது நண்பர்களுடன் பங்குச் சந்தை குறித்து விவாதித்ததைக் கேட்டதும், ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. பங்குச் சந்தையில் நடக்கும் ஏற்ற இறக்கங்களை அறிந்து கொள்வதற்கு தினமும் தனது தந்தை செய்தித்தாள்களை படிப்பார் என்று ஜுன்ஜுன்வாலா முன்பு தெரிவித்துள்ளார். பங்குச் சந்தையில் ஈடுபடுவதற்கு தனது தந்தை அனுமதித்து இருந்தாலும், நிதி உதவி செய்யவில்லை, தனது நண்பர்களிடமும் பணம் வாங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார் என்று ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பல பேட்டிகளில் சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்:
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வெல்ல முடியாதவராக திகழ்ந்தார். முழு வாழ்க்கையையும், நகைச்சுவை உணர்வுகளையும், நுண்ணறிவு ஆகியவற்றை நிதி உலகில் அழியாத பங்களிப்பாக விட்டுச் சென்றுள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என்று பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.