மும்பை 26/11 தாக்குதல் தொடர்பான படங்களுடன் இருவர் கைது! உஷார் நிலையில் காவல்துறை!
2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான படங்களை வைத்திருந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் இருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரிடம் இருந்து 2008 மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய சபாத் ஹவுஸின் படங்கள் மீட்கப்பட்டுள்ளன என மும்பை காவல்துறை கூறியுள்ளது. கொலாபாவில் உள்ள சபாத் ஹவுஸ் 2008இல் மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கான இலக்குகளில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இருவரும் ராஜஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், மும்பை காவல்துறை நகரம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமில் வசிக்கும் முகமது இம்ரான் முகமது யூனுஸ் கான் மற்றும் முகமது யூனுஸ் முகமது யாகூப் சாகி ஆகிய இருவரையும் மும்பை காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு சில நாட்களுக்கு முன்பு புனேவில் அவர்களைக் கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்து வந்தது.
முன்னதாக, பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக புனேயில் ஒருவரை மகாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
விசாரணையில், அவர்கள் தேசத்தின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருப்பதும், இதற்காக வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி எடுத்து, குண்டு தயாரிக்கத் தேவையான பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் காடுகளில் தங்குவதற்கு திட்டமிடப்பட்டு தயாரித்து வைத்த ஒரு கூடாரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு எடை காட்டும் இயந்திரம், ஒரு ட்ரோன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜூலை 18ஆம் தேதி அதிகாலையில் நகரின் கோத்ருட் பகுதியில் பைக்கைத் திருட முயன்ற போது, இம்ரான் கான் மற்றும் யூனுஸ் சாகி இருவரும் கைது செய்யப்பட்டனர். புனே நகர காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களின் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கையைக் கவனித்து கைது செய்தனர்.
கட்டுக்கட்டாக காரில் வந்து இறங்கிய கோப்புகள்! ஆர்.டி.ஐ. கொடுத்த 40,000 பக்க பதில்!