விநாயகர் ஊர்வலத்தின்போது மும்பையில் குண்டுவெடிப்பு நடத்தப்போவதாக லஷ்கர்-ஏ-ஜிஹாதி அமைப்பு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

மும்பை நகரில் பெரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘லஷ்கர்-ஏ-ஜிஹாதி’ என்ற அமைப்பு, விநாயகர் ஊர்வலத்தின்போது பெரும் குண்டுவெடிப்பு நடத்துவதாக அச்சுறுத்தியுள்ளது. 

இந்த எச்சரிக்கையில், 34 மனித குண்டுகள், 400 கிலோ RDX பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மும்பை டிராஃபிக் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரப்பூர்வ WhatsApp எண்ணுக்கு வந்த செய்தி மூலமாகவே இந்த அச்சுறுத்தல் தெரிவிக்கப்பட்டது. 

மும்பை காவல்துறையின் தகவல்படி, அந்தச் செய்தியில் 34 வாகனங்களில் மனித குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும், வெடிப்பு மும்பையை அதிரச் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 14 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர் என்றும், மொத்தம் 400 கிலோ RDX வெடிகுண்டு பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மும்பை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அனைத்து கோணங்களிலும் இந்த அச்சுறுத்தல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.