செல்பி எடுப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகத்தான் உள்ளது. எங்கு இருந்தாலும் அப்போது செல்பி எடுத்துக் கொள்வது பழக்கமாக உள்ளது. செல்பியினால் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம். ஆனாலும் செல்பி மோகம் குறையவில்லை.

செல்பி எடுக்கும்போது சாதாரணமாகத்தான் இருக்கும்... ஆனால் சில நாட்களோ, வாரங்களோ கழித்துப் பார்க்கும்போது அது பெரிய விஷயமாக பார்க்கப்படுவதாக செல்பி விரும்புவர்கள் கூறுகின்றனர். தகாத செயலின்போது எடுக்கப்பட்ட செல்பியால், அதன் பலனை அனுபவித்துத்தான் தீர வேண்டும். இதுபோன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பை பாரெல்லி அரசு மருத்துவமனை ஒன்றில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார் அரவிந்த். கடந்த வியாழக் கிழமை அன்று, இரவு பணியில் இருந்தார். அப்போது, டாக்டர் இல்லாத நிலையில் அங்கு துப்புரவு பணியில் இருந்தார் அரவிந்த். அந்த அறையில் டாக்டரின் கோட், ஸ்டெதஸ்கோப் இருப்பதை பார்த்த அரவிந்த், கோட் - ஸ்டெதஸ்கோப் அணிந்து செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை உறவினர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். 

இந்த புகைப்படம், மருத்துவமனையின் டீன்-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த டீன், இது குறித்து விசாரணை நடத்தி துப்புரவு பணியாளர் அரவிந்தை பணிநீக்கம் செய்தார். இது குறித்து அவர் போலீசுக்கும் புகார் கொடுத்தார். போலியாக டாக்டர் உடை அணிந்து சமூக ஊடகங்களில் புகைப்படம் பதிவேற்றம் செய்த குற்றத்துக்காக அரவிந்த் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.