தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான தாராவியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241ஆக உயர்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் சமூக பரவல் பரவியோத என்ற அச்சத்தில் உள்ளனர். 

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. மகாராஷ்ரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து இந்தியாவில் அதிக பாதிப்பு இருக்கும் முதல் மாநிலமாக மாறியுள்ளது. மகாராஷ்ராவில் முக்கியமாக மும்பை, தாராவி போன்ற இடங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆசியாவில் அதிக குடிசை பகுதிகளை கொண்ட மற்றும் அதிகம் தமிழர்கள் வசிக்கும் இடமான தாராவியில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் கூடிக்கொண்டே செல்கிறது. தாராவியில் அதிக குடிசை வாழ் மக்கள் இருப்பதால் நோய் அதிகமாக பரவும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், தாராவியில் இதுவரை 241பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உள்ளது. இதனால், அப்பகுதியில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7000 நெருங்கி வருகிறது.