நோயாளிகளிடமிருந்து ரூ.1000, ரூ.500 நோட்டை வாங்க மறுத்த தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க மும்பை தானே மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஏராளமான நோயாளிகள் புகார் கொடுத்ததையடுத்து, மாவட்ட கலெக்டர் மகேந்திர கல்யான்குமார் அந்த குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பி நாளைக்குள்(இன்று) விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
மும்பை புறநகர், தானே பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் மருத்துவமனையில் ரதிலால் ஷா என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை முடிந்து, வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் ஆவதற்காக சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்த முயன்றார். அப்போது, தன்னிடம் இருந்த ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களைக் கொடுத்தார்.
ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் அது செல்லாத ரூபாய் நோட்டுக்கள் எனக்கூறி அதை வாங்க மறுத்தனர். இதையடுத்து, ரதிலால் ஷா, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். கலெக்டர் உத்தரவின் பேரில், துணை மண்டல அதிகாரி அந்த மருத்துவமனைக்கு திடீரென வருகை புரிந்து சோதனையிட்டார்.
அப்போது, நோயாளிகளிடம் ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை வாங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது உண்மையானது என அறிந்தார். அப்போது மருத்துவமனை ஊழியர்களிடம், மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த இரு நாட்களுக்கு நோயாளிகளிடமிருந்து பழைய ரூபாய் நோட்டுக்களை மருத்துவமனை பெறலாம் என அறிவித்துள்ள நிலையில் அதை ஏன் மீறி நடக்கிறீர்கள் என அதிகாரி கேள்வி எழுப்பினார்.
அப்போது, மற்ற நோயாளிகளும், தங்களிடம் புதிய ரூபாய் நோட்டுக்களை கேட்டு மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்துகிறது என்று புகார் செய்தனர்.
இதையடுத்து, இந்திய குற்றியவியல் சட்டம் 188 பிரிவுக்கு எதிராகவும், பாம்பே மருத்துவமனை பதிவுச்சட்டம் 1949-க்கும் எதிராகவும் நடந்து கொண்ட மருத்துவமனை மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கூறி, அடுத்த 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அளித்தார்.
அதன்பின், ரதிலால ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
