கடந்த 7 நாட்களாக அவையை நடக்க விடாமல் அமளியில் எதிர்கட்சிகள் ஈடுபட்டு வருவதை எண்ணி வெட்கப்படுவதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 6 நாட்களாக அமளியில் ஈடுபட்டனர். 

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும், மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் கடந்த 6 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியதிலிருந்தே நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் 7 வது நாளான இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். 

இதனால் மக்களவை 12 மணி வரையிலும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. 

மேலும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இந்நிலையில் கடந்த 7 நாட்களாக அவையை நடக்க விடாமல் அமளியில் எதிர்கட்சிகள் ஈடுபட்டு வருவதை எண்ணி வெட்கப்படுவதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.