ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த பேனாவை வாக்களிக்கும் பகுதிக்கு கொண்டுசெல்லக்ககூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கப்போகும் ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் மற்றும் இதர விபரங்கள் வருமாறு:-

  1. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த பேனாவை வாக்களிக்கும் பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வழங்கப்படும் சிறப்பு மை பேனாவில்தான் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.
  2. இந்த தேர்தலில் எந்த அரசியல் கட்சியும் கட்சி உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவை பிறப்பிக்க கூடாது. இது இரகசிய வாக்குப்பதிவு என்பதால் யாருக்கு வாக்களித்தோம் என்பவை வெளியில் யாரிடமும் தெரிவிக்கக்கூடாது.
  3. எம்.பி.க்களுக்கு பச்சை நிற வாக்குச்சீட்டு வழங்கப்படும். எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதா நிற வாக்குச்சீட்டு வழங்கப்படும்.
  4. எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளின் மதிப்பு அந்த அந்த மாநிலத்தின் மக்கள்தொகையை அல்லது அந்த உறுப்பினர் வெற்றிபெற்ற தொகுதியின் மக்கள் தொகையைப் பொருத்து கணக்கிடப்படும்,.
  5. ஒரு எம்.பி.யின் வாக்குகளின் மதிப்பு 708 ஆகும். இது கடந்த1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்பட்டது இது மாறாது.
  6.  இதன்படி நாட்டில் மொத்தமுள்ள 4,896 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இதில் 4,120 எம்.எல்.ஏ.க்களும் 776 எம்.பி.க்களும் அடங்குவர்.
  7.  32 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு வாக்குப்பதிவு மையமும் மாநில சட்டசபைகளில் தலா ஒரு வாக்குப்பதிவு மையமும் என மொத்தம் 32 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கண்காணிப்பாளர்களாக 33 பேரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
  8. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் டெல்லிக்கு எடுத்துவரப்படும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 20-ந் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.புதிய ஜனாதிபதி யார் என்பது அன்றைய தினமே தெரியவரும்.