உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த சில தினங்களாக தினமும் 3000 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி நாட்டில் 1,18,447 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. கொரோனா நோய் பாதிப்பின் தீவிரத்தால் 3,583 பேர் பலியாகி இருக்கின்றனர். அதிர்ச்சி தரும் செய்தியாக இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 6,088 பேர் பாதிக்கப்பட்டு 148 பேர் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது 66,330 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். ஆறுதல் தரும் செய்தியாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாட்டின் அனைத்தும் மாநிலங்களில் இருந்தும்  48,534 மக்கள் கொரோனா நோயில் இருந்து பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 3234 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஸ்டிரா விளங்குகிறது. அங்கு இதுவரை 41,642 பேர் பாதிக்கப்பட்டு 1,454 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 12,905 பேர் பாதிப்படைந்துள்ளனர். 

தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 776 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு மொத்தமாக 13,967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 94 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். அதே போல டெல்லியில் 11,659 பேரும், ராஜஸ்தானில் 6,227 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். பிற மாநிலங்களிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுதல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு 4ம் கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற 31ம் தேதி வரை இந்தியாவில் அனைத்தும் மாநிலங்களிலும் ஊரடங்கு நீடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் ஊரடங்கு நடைமுறைகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.