monsoon session begins today
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடந்தது. இதையடுத்து ஜி.எஸ்.டி விதிப்பை அறிமுகம் செய்வதற்காக நாடாளுமன்றம் மீண்டும் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி நள்ளிரவில் கூடியது. ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை 20 அமர்வுகளாக இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்த எதிர்கட்சிகள், துணை குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பதாலும், இந்த கூட்டத்தொடரில் காரசார விவாதங்கள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பசு பாதுகாவலர்கள் சிலரை அடித்துக் கொன்ற விவகாரம், காஷ்மீர் பிரச்சனை, சிக்கிம் மாநிலத்தில் சீன எல்லையில் நிலவும் பதற்றம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள தாக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, அண்மையில் மறைந்த மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே, பாஜக எம்.பி. வினோத்கன்னா, காங்கிரஸ் எம்.பி. பல்வை கோவர்த்தன் ரெட்டி ஆகியோரின் மறைவுக்கு இரு அவைகளிலும் எம்.பி.க்கள் மவுன அஞ்சலி செலுத்துகின்றனர்.
இதையடுத்து இன்றைய நாடாளுமன்ற கூட்டம், நடவடிக்கைகள் எதுவும் இன்றி ஒத்தி வைக்கப்படும் என்றும் நாளை முதல் வழக்கம்போல் சபை நடவடிக்கைகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
