இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானாவில் அமைச்சராக பதவியேற்றார். ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், இன்று தெலங்கானா அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.பதவியேற்ற பிறகு, முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அசாருதீன் நன்றி தெரிவித்தார். சக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சராக பதவியேற்ற முகமது அசாருதீன்
ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலுக்கு முன்னதாக அசாருதீன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சட்டமன்றத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர். முஸ்லிம் வாக்காளர்களிடையே கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் ஒரு நடவடிக்கையாக காங்கிரஸ் அரசின் இந்த முடிவு பார்க்கப்படுகிறது. அசாருதீன் பதவியேற்பதற்கு முன்பு வரை அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேர்மையாக உழைப்பேன்
அதே வேளையில் தனது பதவியேற்பை இடைத்தேர்தலுடன் தொடர்புபடுத்தக் கூடாது என்று அசாருதீன் கூறினார். "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கட்சியின் மேலிடம், பொதுமக்கள் மற்றும் எனது ஆதரவாளர்களுக்கு நன்றி. நான் அமைச்சரானதுக்கும் ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டும் வெவ்வேறு விஷயங்கள், அவற்றை இணைக்கக் கூடாது. எனக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக நேர்மையாக உழைப்பேன்'' என்று அசாருதீன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு
அசாருதீன் பதவியேற்றதன் மூலம், ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. தெலங்கானாவில் முதலமைச்சர் உட்பட அமைச்சரவையின் மொத்த அனுமதிக்கப்பட்ட பலம் 18 ஆகும். அசாருதீனை அமைச்சரவையில் சேர்த்தது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்றும், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் வாக்காளர்களைக் கவரும் நோக்கம் கொண்டது என்றும் தெலங்கானா பாஜக, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது.
பாஜக கடும் எதிர்ப்பு
இந்த அறிவிப்பு வாக்காளர்களைக் கவரும் நோக்கம் கொண்டது என்றும், இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறும் பாஜக எம்.எல்.ஏ பயல் ஷங்கர் தனது கடிதத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியைக் கேட்டுக்கொண்டார். அசாருதீன் 2023 சட்டமன்றத் தேர்தலில் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டார். தெலங்கானா பாஜக தலைவர் ராம்சந்தர் ராவ் இந்த முடிவை 'சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் செயல்' என்று குறிப்பிட்டார்.
ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல்
ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. எம்.எல்.ஏ.வும், பி.ஆர்.எஸ். தலைவருமான மகந்தி கோபிநாத்தின் மரணத்தைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர் வி. நவீன் யாதவ் போட்டியிடுகிறார், அதே நேரத்தில் பி.ஆர்.எஸ் கோபிநாத்தின் மனைவி சுனிதாவை நிறுத்தியுள்ளது. பாஜக தனது வேட்பாளராக லங்காலா தீபக் ரெட்டியை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
