Asianet News TamilAsianet News Tamil

EXCLUSIVE கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை: முதல்வர் சித்தராமையா பிரத்யேக பேட்டி!

கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்

Modi wave absent in 2024 in Karnataka says CM Siddaramaiah exclusive  interview to Asianet News Network smp
Author
First Published Apr 29, 2024, 2:18 PM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 109 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19 தேதி நடைபெற்ற நிலையில், 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 26ஆம் தேதி நடைபெற்றது. இதில், கர்நாடக மாநிலத்தின் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டத்தில் வருகிற மே மாதம் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மீண்டு மோடி அரசு வேண்டும் என மக்கள் விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா ஏசியாநெட் செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியின் விவரம் கேள்வி பதில் வடிவில் பின்வருமாறு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி: முதல் கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. எத்தனை இடங்களில் வெற்றி பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?


சித்தராமையா: முதல் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளில் 9 முதல் 10 இடங்கள் வரை வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம்.

 

கேள்வி: எந்த அடிப்படையில் இத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள் என நம்புகிறீர்கள்?


சித்தராமையா: முதலாவதாக, மாநில அரசின் உத்தரவாதத் திட்டங்கள் வெற்றிகரமாக மக்களைச் சென்றடைந்துள்ளன. இரண்டாவதாக, மத்தியில் நரேந்திர மோடி அரசின் தோல்விகள். மூன்றாவதாக, நரேந்திர மோடி அரசு கர்நாடகா மீது அநீதியான வெறுப்புப் போக்கைக் காட்டியது மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. அதே சமயம், வாக்குறுதிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதன் மூலம், மாநில காங்கிரஸ் அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதெல்லாம் எங்கள் நம்பிக்கை காரணம்.

ரயில்களில் சைட்-லோயர் இருக்கைகளில் இருக்கும் வசதி: பலருக்கும் தெரியாத ஆப்ஷன்!

கேள்வி: இந்த தேர்தல் தேசியப் பிரச்சனைகள் பற்றியது என்றும், மாநில உத்தரவாதங்கள் அல்ல என்றும் பாஜக கூறுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


சித்தராமையா: இந்தத் தேர்தல் உண்மையில் தேசியப் பிரச்சினைகளைப் பற்றியது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு என்ன செய்தது என்பதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பது, ரூபாய் மதிப்பை மேம்படுத்துவது போன்ற பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, மோடி நிர்வாகம் மீது மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர், இது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்.

கேள்வி: கர்நாடகாவில் மோடி அலை உள்ளதா?


சித்தராமையா: கர்நாடகாவில் மோடி அலை என்பது இல்லை. 2014, 2019இல் இருந்த மோடி அலை, 2024ஆம் ஆண்டு தேர்தலில் இல்லை. ஆனாலும், எங்கள் அரசின் திட்டங்களுக்கு அலை வீசுகிறது.

கேள்வி: அப்படியானால், தேர்தல் முடிவுகள் உத்தரவாதத் திட்டங்களின் அடிப்படையில் இருக்குமா?


சித்தராமையா: ஆம், உத்தரவாதத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது, மேலும் எங்கள் நிர்வாகத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம்.

கேள்வி: சித்தராமையா அரசை தாக்குவது பிரதமர் மோடிக்கு தேசிய அளவில் முக்கிய விஷயமாக மாறி விட்டதா?


சித்தராமையா: ஆம், துரதிர்ஷ்டவசமாக, அது உண்மை. பிரதமர் மோடி பொய்யான தகவல்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்.

கேள்வி: தேர்தலுக்குப் பிறகு கர்நாடகாவில் சித்தராமையா முதல்வர் பதவியில் மாற்றப்பட்டு, கர்நாடகாவின் புதிய முதல்வராக துணை முதல்வர் பதவியேற்பார் என மோடி கூறுகிறாரே?

250 பெண்களின் ஆபாச வீடியோ.. வசமாக சிக்கிய தேவகவுடா பேரன்.. கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா யார்?


சித்தராமையா: இங்கு பாஜக ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடியே முதல்வர்களை மாற்றினார். அவர் இப்போது எங்கள் கட்சியை விமர்சிப்பது விந்தையானது. காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்.

கேள்வி: தேசிய அளவில் காங்கிரசுக்கு தலைமைப் பற்றாக்குறை இருப்பதாக மோடி கூறுகிறாரா?


சித்தராமையா: ஒவ்வொரு கட்சியிலும் தலைமைத்துவம் உருவாகியுள்ளது. மோடிக்கு முன் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் பாஜகவை வழிநடத்தியது போல், இன்று நமது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், ராகுல் காந்தியும் நாட்டிற்கு வழிகாட்டும் திறமையான தலைவர்களாக உருவெடுத்துள்ளனர்.

கேள்வி: மதசார்பற்ற ஜனதாதளம் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வழக்கு குறித்து?


சித்தராமையா: ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியுள்ளோம். விசாரணையில் அரசு தலையிடாது, அதன் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: உங்கள் மகன் யதீந்திரவின் அரசியல் எதிர்காலம் குறித்து உங்கள் எண்ணங்கள் என்ன?


சித்தராமையா: இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என யதீந்திரா தேர்வு செய்து, அதற்கு பதிலாக எனக்கு ஆதரவளித்துள்ளார். தேர்தல் முடிவுகளை மதிப்பீடு செய்த பிறகே அவரது அரசியலில் எதிர்காலம் குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்.

கேள்வி: காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் பிரதமர்?


சித்தராமையா: பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வெற்றி பெற்றால் அது வேறு விஷயம். அவர்கள் வெற்று பெற்றால் மோடிதான் பிரதமர். அவர் ஏற்கனவே தன்னை பிரதமராக அறிவித்து விட்டார். இருப்பினும், காங்கிரஸ் இந்தியா என்ற கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதன் விளைவாக, கூட்டணி கட்டமைப்பு காரணமாக எந்தவொரு நபரையும் பிரதமராக நியமிப்பது சாத்தியமில்லை. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, பொதுவான குறைந்தபட்சத் திட்டத்தை உருவாக்கி, பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டு முடிவெடுக்கும் செயல்முறை தொடங்கும்.

தற்போது மம்தா பானர்ஜிக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. தேர்தலுக்கு பின்பு பாஜகவுடன் கூட்டணி வைப்பார்களா? இல்லை. அவர்கள் இந்தியா கூட்டணியுடன் தொடர்ந்து இணைந்திருப்பார்கள். தேசிய அளவில் காங்கிரஸ் எத்தனை இடங்களைப் பெற முடியும்? சரியான எண்ணிக்கையை என்னால் குறிப்பிட முடியாது. ஆனால் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்தால் ஆட்சி அமைக்க கணிசமான பெரும்பான்மையை அடைய காங்கிரஸ் தயாராக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios